இந்த தேசம் தர்மசாலா அல்ல !  இந்திய உச்சநீதிமன்றத்தின் அகதிகள் குறித்த நீதி வழங்கலில் இரட்டை நிலைப்பாடு! -சட்டவாளர் ஆதி

இந்தியா என்றால் உலகில் இரக்கம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று பெருமையாக பேசப்படும் நாடு. ஆனால்,   பல நேரங்களில்  அரசியல் குழப்பங்கள், சட்ட நுணுக்கங்களில் சிக்கி,   பாரபட்சமும் அநீதி யும்  கொண்ட  தீர்ப்புகளே  வெளிப்படுகின்றன.
தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின்  நீதிபதி திபாங்கர் தத்தா, ஈழத்தமிழ் அகதி சுப சேகரனின் மனுவை தள்ளுபடி செய் யும் போது, “இந்தியா தர்மசாலா அல்ல” என்றார். இந்த வார்த்தை, நீதியின் பெயரில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் அல்ல; இது தமிழீழ அகதிகளின் துயரத்தை மறுக்கும் சமூக நோய்க்குறியின் வெளிப்பாடு. அந்த மனுவில், தனது நோயுற்ற மனைவி, இருதயக்கோளாறு  உள்ள  தனது மகன் உட்பட குடும்பத்தினர் இந்தியாவில் தங்கியிருக்க  நிவாரணம் வேண்டியும், தான் புலிகள் அமைப்பை மறுகட்டமைக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதால் தன்னையும் தனது குடும்பமும் இலங்கை செல்ல நேரிட்டால் கொல் லப்படலாம் என்ற  நியாயமான தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு நீதிமன்றம் கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை.
அதே நீதிமன்றம், இந்திய அரசு கடலில் வீசிய 41 ரோகின்யா அகதிகள் குறித்து மனு தாக்கல் செய்யும் போது, “இதற்கான ஆதாரம் என்ன?” என்று கேட்டு அதைத் தள்ளுபடி செய்தது. உயிர்கள் மூழ்கியிருக்கலாம் எனும் சந்தேகம் கூட நீதியின் கண்களில் மதிப்பற்றதாக மாறியது. மனித உயிர்களின் வலி, துன்பம் நீதியின் வரம்புக்கு அப்பால் போய் மறைக்கப்பட்டது.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமையை வழங்குகிறது.‌இந்த சட்டத்தின் நோக்கமே குழப்பமானது. இப்படியே ஒரு குடியுரிமை சட்டத்தை போன்ற சட்டம் உலகில் வேறெங்கும் இல்லை! இந்நிலையில் தான் தமிழீழ அகதி குறித்த உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இலங்கையில் இனப் படுகொலைக்கு உள்ளாகிய ஈழத்தமிழர்களுக்கு வழங்கப் படாத வாய்ப்பு திபெத்திய அகதிகளுக்கு கல்வி, வேலை, அடையாள அட்டைகள் உடன் சுதந்திரமாக வாழ்க்கை நடத்தும் வாய்ப்பு இந்திய அரசு வழங்கி வருகின்றது. ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்
நாட்டில் முகாம்களில் சிறை க்கு ஒத்த  வாழ்க்கையை அனு பவிக்கிறார்கள்.
தமிழீழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் ஓர் அங்கம் அவர் களை அந்நியர்களாக பார்க்க இயலாது.  அவர்களின் துயரங்கள் தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக உள்ளது. உச்சநீதிமன்றம் மட்டும் அல்ல குடி யுரிமை சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசும் தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்தது.  உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகள் ஈழத் தமிழர்கள் மீதான நேச  உணர்வை ஊசி போல சுருக் என குத்து கிறது.
நீதிமன்றங்கள் மனித நேயத்தை மறக்க கூடாது. அகதிகள் இந்த தேசத்தின் பாரமல்ல;அது யார் எனினும்.  அவர்களுக்கு இடம் கொடுப்பது இரக் கம் அல்ல; அது நம் அறத்தின் அடையாளம்.