‘இந்திய மீனவர்களின் அடாவடியால் 3 இலட்சம் ரூபா வலைகளை இழந்துள்ளேன்’  பருத்தித்துறை மீனவர் விசனம்

165 Views

யாழ்.வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி  மீன் பிடியில்  ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், தனது வலைகளை  சேதப்படுத்தியதாக பருத்தித்துறை மீனவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய (தமிழகம்) மீனவர்கள் கடற்படையினால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது மட்டுமின்றி, இவ்வாறு அத்துமீறி மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக தமிழர் தாயகதத்தைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு மீனவர்களுக்கிடையேயும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும் தொடர்ந்து இவ்வாறான அத்துமீறல்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

இந்நிலையில், நேற்று இந்திய மீனவர்கள் தனது வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ள   சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவிக்கையில், “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக படகில் சென்றேன்.

அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்தெடுத்திருந்தனர்.

வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர்கள் மிரட்டினார்கள்.

மேலும், அவர்கள் முகத்தை தெரியாதவாறு துணி கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்தனர். பல மணி நேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளேன். இதனால் சுமார் 3 இலட்சம் ரூபா வலைகளை இழந்துள்ளேன்” என கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply