இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது.
இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும். ‘உலகளாவிய பெருங்கடல் வலயம்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினத்தின் 9 ஆவது பதிப்பை நினைவுகூரும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் பிஎன்எஸ் திப்பு சுல்தான் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. இது 168 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு கெப்டன் ஜாவாத் ஹூசைன் தலைமை தாங்குகிறார்.
இந்தநிலையில் கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் காலத்தில், இரண்டு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது இலங்கை கடற்படைக் கப்பலுடன் திப்பு சுல்தான் கப்பல் கடவுப் பயிற்சியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, திப்பு சுல்தான் நாளை இலங்கையிலிருந்து இருந்து புறப்படவுள்ளது.