Tamil News
Home செய்திகள் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கியின் ஆளுநர்

இந்திய சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாய் மாற்றப்பட்டுள்ளமையானது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தீர்வுக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையேயான டிஜிட்டல் கொடுப்பனவு முறைக்கும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதேநேரம் குறித்த நிகழ்வில் உரையாற்றிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version