டொனமூர் யாப்பை பிரித்தானியர் உரு வாக்கும் போது எதனை எண்ணி னார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ, எதனை இலக்காக வரைந்திருந்தார்களோ அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டது. அதன்படி நவீன அரசியலில் இந்திய எதிர்ப்பு – தமிழின எதிர்ப்பு என்பனவற்றை முதலீடாகக் கொண்டு சிங்களத் தலைவர்களை அரவணைத்து இந்தியாவிற்குப் பாதகமான இராணுவத் தளங்களையும், தமிழ ருக்குப் பாதகமான அரசியல் யாப்பையும் சோல்பரி யாப்பால் உருவாக்க முடிந்தது.
சோல்பரி யாப்பின் பிரதான சூத்திரதாரியாக விளங்கியவர் சேர். ஓலிவர் குணதிலக ஆவார். இவர் பிரித்தானிய அரசின் ஆளும் குழாத்தைத் சேர்ந்த அதியுயர்; சிங்கள இன அதிகாரியாவார். இவரைப் பயன்படுத்தியே White Hall (பிரித்தானிய அரசாங்க பீடம்) டி.எஸ்.சேனநாயக்கவை நெறிப்படுத்தி, பிரித்தானிய இராணுவத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு ஏற்ற கையாளலையும் அதன் அடிப்படையில் யாப்பு உருவாக்கத்தையும் மேற் கொண்டனர்.
டி.எஸ்.சேனநாயக்க, சேர்.ஓலிவர் குணதி லக, பிரித்தானியரான பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ் ஆகிய மூவருமே சோல்பரி அரசியல் யாப்பை வடிவமைத்த சிற்பிகளாவர். இவர்கள் மூவரும் யாப்பை உருவாக்கிய முப்பெரும் தூண்கள் -‘triumvirate’ – என குறிப்பிட்டு அழைக்கப்படுவது கவனத்திற்குரியது. இவர்கள் மூவரும் இணைந்து Ministers’ draft உருவாக்கினார்கள். இதில் அரசியல் யாப்பு சார்ந்த அறிவியல் மூளையாக செயற்பட்டவர் ஐவர் ஜெனிங்ஸ், இராசதந்திர சூத்திரதாரியாக செயற்பட்டவர் ஓலிவர் குணதிலக, அரசியல் தலைவராக மேற்படி இருவரின் வழிகாட்டலின் படி செயற்பட்டவர் டி.எஸ்.சேனநாயக்க. இவர்கள் தயாரித்த மந்திரிசபை அரசியல் யாப்பு நகல் (Ministers’ draft) 1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டு பிரித்தானிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நகல் யாப்பானது பிரித்தானிய Westminster அரசியல் யாப்பு முறையை பின்பற்றி எழுதப்பட்டது. ஒற்றையாட்சி முறையின் கீழான பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் கீழ பெரும்பான்மையின (Majoritarianism) ஆட்சியை மேலும் பலப்படுத்த இந்த Westminster முறை உதவும் என்பதைப் புரிந்து கொண்டு இந்த யாப்பு வடிவமைக்கப்பட்டது.
1940களின் ஆரம்பத்தில் இருந்து தோன்றிய புவிசார் அரசியல் இராசதந்திர நகர்வுகளையும் அது தொடர்பான கருத்துருவாக்கங்களையும் இங்கு அவதானிக்க வேண்டியது அவசியம். இப்பின்னணியில் பிரித்தானியரின் கேந்திர நலன்களை உணர்ந்திருந்த சிங்களத் தலைவர்கள், அதன் பொருட்டு பிரித்தானியரிடம் தமக்கான பேரம் பேசும் சக்தியை வளர்ப்பதற்கான முற் தயாரிப்புகளில் ஈடுபட்டனர். 1940ஆம் ஆண்டு யூலை மாதம் 20ஆம் தேதி இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு பின் வருமாறு கடிதம் எழுதியிருந்தார்.
‘சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக் கமான கூட்டாட்சி முறையோ (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம். என்று எழுதினார்.
அதற்கு ஜவஹர்லால் நேரு ஓகஸ்ட் மாதம் 7ஆம் தேதி பதில் எழுதுகையில் ‘சிறிய அரசுகளின் காலம் முடிந்துவிட்டது. சமஷ்டி அமைப்பு முறையிலான பெரிய அரசுகளோ அன்றி இறுக்க மான பிணைப்புக்களைக் கொண்ட பெரிய சாம் ராச்சியங்களோதான் எதிர்காலத்தில் தப்பிப் பிழைக்க முடியும். எதிர்கால உலகில் தனித்து நிற்க முடியாத அளவிற்கு இலங்கை அரசியற் பொருளாதார ரீதியில் ஒரு மிகச் சிறிய அரசே ஆகும். இத்தகைய சூழலில் மிகப்பெரும் ஆபத்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படும் என்ற வகையில் உங்களின் கருத்தை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார். மைக்கல் றொபேர்ட் தொகுத்த Documents of the Ceylon National Congress என்ற நூலில் மேற்படி கடிதங்களைக் காணலாம்.
அதேவேளை டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு 1942ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி டி.எஸ். சேனநாயக்க அளித்த நேர்காணலில் ‘பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது. என்றார்.
இவற்றைத் தொடர்ந்து பிரித்தானியர் பக்கம் இருந்து இந்தியா தொடர்பாக சிங்களத் தலைவர்களை அச்சுறுத்தும் கருத்துக்கள் வெளியாகின. இதன் பின்னணியில் சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் தந்திரம் மேல்நிலை அடையத் தொடங்கியது.
‘இந்தியாவும் இலங்கையும் இணைக்கப் பட்டால் அவ்விணைப்பானது சமத்துவ அடிப் படையில் அமையாது. இந்த இணைப்பில் இந்திய சமஷ்டி அமைப்பினுள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அமையும். இத்தகைய போக்கானது ஓர் இயல்பான தலைவிதி என்று இந்தியத் தலைவர்கள் கூறும் அளவிற்குக்கூட சென்றுவிட்டது’ என்று ஐவர் ஜெனிங்ஸ் தெரிவித்தார். இக்கருத்தை ஐவர் ஜெனிங்ஸ் 1951ஆம் ஆண்டு எழுதிய The Commonwealth in Asia என்ற நூலில் எழுதியிருந்த போதிலும் இவர் 1943ஆம் ஆண்டில் இருந்து
டி.எஸ்.சேனநாயக்கவின் தலையாய ஆலோசகராக விளங்கினார்.
இத்தகைய கருத்தோட்டத்தைக் கொண்டி ருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ்தான் டி.எஸ்.சேன நாயக்கவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார் என்றால் எப்படி அவர் டி.எஸ்.சேனநாயக்கவை கையாண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள் ளலாம். இந்தியாவுடன் இணைப்பு என்று சிங்களர்கள் பேசியதும், சிங்களத் தலைவர்கள் எதிர்பார்த்தவாறு பிரித்தானியர் சிங்களத் தலைவர்களை தம்பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் புடைசூழத் தொடங்கினர்.
எப்படியோ இதன் மூலம் சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் சக்தியும் உயர்ந்தது. பிரித்தானியாவிற்கான கேந்திர நலன்களும் முதன் மைப் பெற்றன. அத்துடன் சிங்களத் தலைவர்கள் இந்தியாவுடன் கூட்டாட்சி என்ற பேச்சையும் கைவிட்டு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை தெளிவாக எடுக்கத் தயாராகினர்.
இந்தியாவுடன் ஒட்டியதான இடவ மைவை இலங்கை கொண்டிருக்கும் நிலையில் புவியியல் ரீதியிலும் மற்றும் அரசியல் ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் இயல்பாகவே அது இந்தியா வின் ஒரு பாகமாய் இணைந்திடக்கூடிய ஆபத்து இருப்பதைப் பற்றி பிரித்தானியர்கள் பெரிதும் பேசிவந்தனர். இப்பின்னணியில் புதிய அரசியல் யாப்பு, இலங்கை சுதந்திரம் அடைதல் பற்றிய விடயங்கள் பிரித்தானியருக்கும், சிங்களத் தலைவர் களுக்கும் இடையே பேசப்படலாயின என்பது பற்றி ஓலிவர் குணதிலகவின் மேற்படி வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவினதும் அதன் அணிநாடுகளினதுமான புவிசார் கேந்திர நலனைப் பேணுவதில் இலங்கையின் கேந்திர முக்கியத் துவம் தலையாயது என்பதும், ஈழத்தமிழரின் நலன்களில் இந்தியாவின் அக்கறை பெரிதாக உண்டு என்றும் இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு யாப்பையும், இலங்கையின் சுதந்திரத் தையும் தீர்மானிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஓலிவர் குணதிலகவுக்கும், பிரித்தானிய குடியேற்றச் செயலாளருக்கும் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் உரையாடல் கள் நிகழ்ந்தன.
தொடரும்…