ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது தமக்கு கடப்பாடு உண்டென்று பிரித்தானிய தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றை மேவி தாம் ‘பிரித்தானியாவின் நல்ல நண்பர்’ என்றும் ‘யுத்தத்தின் போதும் சமாதானத் தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்’ என்றும் எனவே தம்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஓலிவர் குணதிலக பலவாறாக எடுத்துக்கூறி, யாப்பு உரு வாக்கம், இலங்கை சுதந்திரம் அடைவது பற்றிய தீர்மானம், பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்
பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ்.சேனநாயக்கவின் சார்பில் நிறைவேற்றினார்.
(இவை தொடர்பான விபரங்களை Sir Charles Joseph Jeffries vOjpa OEG, A Biography of Sir Oliver Ernest Goonetilake என்ற நூலில் வரும் Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களில் காணலாம்.)
மேற்படி பிரித்தானியரை திருப்திப்படுத் தும் வகையிலும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் ஓலிவர் குணதிலக பின்வருமாறு கூறிய கூற்றுகள் கவனத்திற்குரியவை. ‘நாங்கள் உங்கள் நண்பர்கள். இலங்கை யுத்தத்திலும் அமைதியிலும் உங்களுக்கு உண்மையாகவே இருந்து வந்திருக்கிறது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் பொய்யாக்கியதே இல்லை.” (“We are your friends. Ceylon has always been loyal to you in peace and war. We have never let down you.” p.88.) உங்களுக்கு அவசியமானது என்று நீங்கள் கருதும் எந்ததொரு உடன்படிக்கையும் நாங்கள் உங்களுடன் மகிழ்ச்சியோடு செய்து கொள்வோம். உங்களுடைய பாதுகாப்பு நலன்களுக்காக நீங்கள் நம்பிக்கைக்குரிய இரகசிய ஒப்பந்தங்கள் செய்திருக்கும் வேறு யாரையும்விட எங்கள் மீது நீங்கள் குறைந்தளவு நம்பிக்கை கொள்ள காரணம் ஏதாவது உண்டோ? [ “We will gladly enter into any agreements you think necessary… Have you any reason to believe us less trustworthy than others to whom you have confided your defence interests?” – p.89.] ஆனால் இக்காலத்தில் தமிழ்த் தலைவர்கள் மேற்படி புவிசார் அரசியல் பின்னணியைப் பற்றியோ அல்லது மேற்கண்டவாறான இராசதந் திர நகர்வுகளைப் பற்றியோ புரிந்து கொள்ள இயலாதவர்களாய் காணப்பட்டனர்.
இதற்கு மாறாக இத்தகைய அரசியல் ஆட்சிக்கலை நுணுக்கப் போக்குக்களை தெரிந்து கொள்ளாத தமிழ்த் தலைவர்கள் பிரித்தானியர் மீது நம்பிக்கை வைத்து ‘பிரச்சினை பிரித்தானியர் அல்லர் சிங்களவர்தான்’ என்ற கோணத்தில் பிரித்தானியரை நீதிமான்களாக கருதி அவர்களிடம் முறையிடும் அரசியல் பாரம்பரியத்தையே கொண்டிருந்தனர். விதானைக்குப் பயந்து உடை யாரிடம் அடைக்கலம் புகுந்த பாமரனின் கதை போலவே இது அமைந்தது.
மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் சோல்பரி பிரபு கையெழுத்திட்டதற்குப் பின்னான பெயரே சோல்பரி அரசியல் யாப்பாகும். மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் 29ஆவது சரத்தும், செனட் சபையும் இருக்கவில்லை. இவை இரண்டையும் சோல்பரி புதிதாக இணைத் திருந்தார்.
சோல்பரி அரசியல் யாப்புக் காலத்தில் 1950களின் மத்திவரை திரு.ஜி.ஜி.பொன்னம்பலமும் பின்பு திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தமிழ் மக்களுக்குத் தலைவர்களாக விளங்கினர்.
உண்மையில் இன – மத – மொழி சார்ந்த ‘சிறுபான்மையினர்’ என்ற தரப்பில் யாருக்கும் இந்த 29ஆவது சரத்து பாதுகாப்பு அளிக்கவில்லை. அதேவேளை செனட் சபையினாலும் மேற்படி எத்தகைய ‘சிறுபான்மை’ பிரிவினருக்கும் பாது காப்பு அளிக்க முடியவில்லை. உலக அபிப்பிராயத்தை மீறி இலங்கை அரசு எதிர்காலத்தில் செயற்பட இயலாது இருக்கும் என்றும் எனவே இலங்கை அரசால் இனங்களுக்கு பாதகமான ஏற்பாடுகளைச் செய்யமுடியாது இருக்கும் என்றவாறு ஓலிவர் குணதிலக பிரித்தா னிய ஆட்சியாளர்களிடம் 1940களின் மத்தியில் எடுத்துக்கூறியிருந்தார்.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி அனைத்து சட்டங்களையும், நடைமுறைகளையும் சோல்பரி உயிரோடு இருக்கும் காலத்திலேயே இலங்கை அரசு சட்டங்கள் மூலமும் இனக்கலவரங்கள் மூலமும் மற்றும் அரசியல், நிர்வாக நடைமுறைகள் மூலமும் நிறைவேற்றியதைக் காணலாம். இது இன்றும், இனியும் பொருந்தும்.
‘சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான திரு. டி.எஸ்.சேனநாயக்க உயிருடன் இருந்திருப்பாரானால் அதிர்ச்சிகரமான 1958ஆம் ஆண்டு நிகழ்வுகளும் இன்று தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையே நிலவும் துயரகரமான பதற்றமும் ஏற்பட இடமிருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.” [ “But had Mr. D.S. Senanayake, the first Prime Minister of independent Ceylon, lived, I cannot believe that the shocking events of 1958 and the grave tension that now exists between Tamils and Sinhalese would have ever occured. ] டி.எஸ்.சேனநாயக்கவின் மீது சோல்பரி ஆணைக்குழு நம்பிக்கை கொண்டிருந்ததைப் பற்றியும் ஆனால் அவரின் மரணத்தின் பின்பான சிங்கள அரசியல் போக்குகள் தனக்கும் தனது குழுவினருக்கும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் பாமர் எழுதிய Ceylone: A Divided Nation என்ற நூலுக்கான அணிந்துரையில் சோல்பரி மேற் கண்டவாறு கூறியுள்ளார். முதலில் ஒரு தனிநபரை நம்பி ஒரு நாட்டின் வரலாற்றை வகுக்க முடியாது என்பதை அவர் அறியாதவர் அல்லர்.
பரன் ஜெயதிலகவைத் தொடர்ந்து அவரது Leader of the House என்ற பதவியில் டி.எஸ்.சேன நாயக்க அமர்ந்து தனிப்பெரும் தலைவராக மிளிரத் தொடங்கினார். அவரது தனிச் சிங்கள மந்திரிசபைக்கால அரசியலையும், கூடவே மலையகத் தமிழரின் குடியுரிமை, வாக்குரிமை என்பனவற்றை சுதந்திரத்திற்குப் பின் அவர் பிரதமராய் இருக்கும் போதே 1948 – 49ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தமிழரிடமிருந்து பறித்தெடுத்து மலையகத் தமிழரை கதியற்றவர்களாக்கினார் என்பதையும், மிகவும் சர்ச்சைக்குரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை ஈழத் தமிழ் மண்ணில் ஆரம்பித்தார் என்பதையும் நோக்கினால் சேனநாயக்க பற்றிய சோல்பரியின் மதிப்பீடு அர்த்தமற்றது என்பது தெளிவாகும்.
1956ஆம் ஆண்டு யூன் மாதம் தனிச் சிங்கள மசோதா விவாதிக்கப்பட்டுக் கொண்டி ருந்தபோது டொக்டர். என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் டி.எஸ்.சேனநாயக்க உட்பட்ட சிங்களத் தலைவர்களைப் பற்றி கூறிய மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியது. அதாவது கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் டி.எஸ்.சேன நாயக்க காலத்தில் இருந்து ஒவ்வொரு சாத்தியமான திருப்பங்களிலும் சிறுபான்மையினங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், டொனமூர் யாப்பு கொண்டுவரப்பட்ட போது, குறிப்பாக மலையக மக்கள் உட்பட்ட சிறுபான்மையினங்களு க்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்பு அவை மீறப்பட்டதாகவும், மீண்டும் சோல்பரி யாப்பின் கீழும் இதுவே நிகழ்ந்ததாகவும் என்.எம்.பெரேரா விவரித்துச் சொல்கிறார்.
[“In point of fact, if you go back to the history of the country, you will find that the minorities have been betrayed at every possible turn, from the time of Mr. Senanayake, when the Donoughmore Constitution came up, the minorities, in particular the Indian community, were given certain promises which were broken. Then again, when the Solubury Commission too…”] – Hansard 1956 June, C. 1861.
டொனமூர், சோல்பரி யாப்புக்கள் இரண் டும் பிரித்தானியாவின் பூகோள நலன் சார்ந்த அரசியலுக்கு இலங்கைத் தீவை பயன்படுத்துவது என்ற உறுதியான, நீண்டகால நோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. மேற்படி அத்தேவையின் பொருட்டு சிங்களவர்களைத் திருப்திப்படுத்தவும், இலங்கையை இந்தியாவுடன் இணையவிடாது தடுக்கவும் வேண்டிய கட்டா யத்தின் பேரில், தெரிந்து கொண்டே தமிழரைத் பலியிடும் அரசியல் யாப்புகளை உருவாக்கி, பிரித்தானியர் தம் இலக்கை எண்ணிய அளவில் அடைந்தனர் என்பதே உண்மை.