இந்தியாவில் பரவிவரும் H3N2 வைரஸ் காய்ச்சல்

கொரோனா போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் H3N2 எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது.

ஹரியாணாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என நாட்டில் இதுவரை 2 பேர் இந்த காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் ஜனவரி மாதம் முதல் பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. மார்ச் 9ம் தேதி நிலவரப்படி நாடு முழுவது 3,038 பேர் H3N2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 1245 பேரும், பிப்ரவரியில் 1307 பேரும் மார்ச் மாதத்தில்(9ம் தேதி நிலவரப்படி) 486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

H3N2 வைரஸ் என்றால் என்ன?

பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), இந்திய மருத்துவ கூட்டமைப்பும் (IMA) அடையாளப்படுத்தியுள்ளன. H3N2 வைரஸ் என்பது ஒரு பருவ கால காய்ச்சல் ஆகும். தொற்றக்கூடிய தன்மை அதிகமாக உள்ள இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போதோ, இருமும்போதோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர் .

H3N2 வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், குமட்டல்/வாந்தி, தொண்டை வலி, உடல் வலி/ சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன. இவற்றுடன் மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

பாதிப்பு என்ன?

H3N2 வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘H3N2 வைரஸ் காய்ச்சல் மிக ஆபத்தானது என்று கூறமுடியாது. இது சாதாரண பருவ கால காய்ச்சல்தான். பொதுவாக இவற்றை மூன்று வகையாக பிரித்துகொள்ளலாம்.

‘ஏ’ வகை என்பது வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. ‘பி’ வகை என்பது காய்ச்சல் 5 நாட்கள் வரை இருக்கும். அதை தொடர்ந்து உடம்பு வலி இருக்கும்.

‘சி’ என்பது இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இணை நோய் உள்ளவர்கள் H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அவர்களின் பிரதான நோயின் பாதிப்பு அதிகரித்து மரணம் ஏற்படக்கூடும்.’ என்றார்.

மேலும், வைரஸ் நுரையீரலை பாதிக்கும்போது, நிமோனியா வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி – பிபிசி தமிழ்