இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் மாயமாகி உள்ளன.
கேரளாவின் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. இக்கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கட்டும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
2021ஆம் ஆண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் இராணுவத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 40,000 தொன் எடையுடன் நவீன போர் விமானங்கள் கப்பலில் இறங்கும் அளவுக்கு உயர் தொழில் நுட்பத்துடன் இக்கப்பல் கட்டுமான பணி நடந்து வருகிறது.
ஐ.என்.எஸ். விக்ராந்த் கட்டப்படும் தளத்துக்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. ஊழியர்களும் பலத்த சோதனைக்கு பிறகே பணிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் கப்பலில் உள்ள பொருட்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் கப்பலில் இருந்த நான்கு கணினிகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் கணினிகளின் வன்தகடு உள்ளிட்ட சில முக்கிய சாதனங்களையும் காணவில்லை.
காணாமல் போன கணினி மற்றும் வன்தகடுகளில் ஐ.என்.எஸ். விக்ராந்தின் வடிவமைப்பு, விமானங்கள் எந்தெந்த பகுதிகளில் இறங்க வேண்டும், எங்கு எரிபொருள் நிரப்ப வேண்டும், எந்த பகுதிகளில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணினிகள் மற்றும் வன்தகடுகள் காணாமல் போனது பற்றி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்ததுக்கும், கேரள பொலிஸ் பொறுப்பதிகாரி. லோக்நாத் பெக்ராவுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஐ.என்.எஸ். விக்ராந்தில் கணினிகள் மாயமானது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. மேலும் லோக்நாத் பொக்ராவும் தனிப்படை அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.