ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகப்படுத்திக்கொண்டோ, நீட்டித்துக்கொண்டோ இருக்க முடியாது- பைடன்

273 Views

“படைகளை விலக்கிக் கொள்ள உகந்த நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையில், மாறுபட்ட விளைவு ஏற்படும் என்று எதிர்பார்த்து நாம் தொடர்ந்து நமது படைகளை ஆப்கானிஸ்தானில் அதிகப்படுத்திக்கொண்டோ, நீட்டித்துக்கொண்டோ இருக்க முடியாது” என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்.

சுமார் 20 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபன்களை எதிர்த்துப் போராடிவரும் அமெரிக்கப் படையினரை முற்றாக விலக்கிக் கொள்ள உள்ளது அமெரிக்கா.

2020 பிப்ரவரி மாதம் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், நேட்டோ கூட்டணியும் 2021 மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. அல் காய்தாவோ, பிற தீவிரவாத அமைப்புகளோ தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட தாலிபன்கள் அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தாலிபன்கள் பங்கெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்,

“ஆப்கானிஸ்தானில் நாம் ராணுவரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், ராஜீய, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

3 இலட்சம் பேரைக் கொண்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரத் தாக்குதல் காரணமாக நாம் ஆப்கானிஸ்தான் சென்றோம். 2021-ம் ஆண்டிலும் நாம் அங்கே தொடர்ந்து இருப்பதற்கு அது காரணமாக முடியாது.

ஆப்கானிஸ்தானில் தற்போது பணியாற்றி வரும் பல இராணுவ வீரர்களின் தந்தையர்களும் அதே சண்டையில் அங்கே பணியாற்றியவர்கள்” என்றார்

மேலும் சைபர் தாக்குதல்கள், சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், “நம் முன்பாக இருக்கும் சவால்களில் கவனம் செலுத்தவேண்டும்” என்று  பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட 2,488 அமெரிக்கப் படையினர் புதைக்கப்பட்ட ஏர்லிங்டன் தேசியக் கல்லறைக்குச் சென்று  பைடன் புதன்கிழமை அஞ்சலி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply