ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்றையதினம் (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய முறையில் தொழில் வழங்கப்பட வேண்டும், ஊழியர் நலன்புரி சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்யப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், ஆனையிறவு உப்பு தொழிற்சாலை அரச நிறுவனம் என்ற போதிலும் ஊழியர்களுக்கு எதிராக அதன் நிர்வாகம் பல அடக்குமுறைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம், அரசாங்கம் ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்குவதாக உறுதியளித்த போதிலும் இதுவரையில் அவை வழங்கப்படவில்லை என்றும் ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.