ஆட்கடத்தல் விவகாரம்- இலங்கைக்கு வான் கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய அவுஸ்திரேலியா

296 Views

நாடுகளுக்கிடையில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்களின் உறுதிப்பாடுகளை அவுஸ்திரேலியா மிகவும் மதிக்கின்றது என ஒன்றிணைந்த செயற்குழு படையணியின் கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார்.

2021 ஏப்ரல் 08ஆம் திகதி இணைய வழியாக இடம்பெற்ற வைபவத்தில் ஒன்றிணைந்த பாதுகாப்பு செயற்குழுவின் கட்டளை அதிகாரி மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்  காவல்துறை ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக இலங்கை காவல்துறைக்கு 5 வான் பரப்பு கண்காணிப்பு ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஆட்கடத்தல், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இலங்கையுடன் கைகோர்த்தது  அவுஸ்திரேலியா | Virakesari.lk

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான ஒன்றிணைந்து செயற்குழுப் படையணியானது, ட்ரோன் மூலம் வான் பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதிகளுக்கான ஒத்துழைப்பை இலங்கையின் காவல்துறையினருக்கு  பெற்றுக்கொடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகள்,நாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் ஏற்படும் குற்றச் செயல்களைத் தடுத்தல் மற்றும் கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட் கடத்தல் நடவடிக்கைககள் என்பனவற்றைத் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த செயற்குழு படையணியின் கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் மார்க் ஹில், “நாடுகளுக்கிடையில்  இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதில் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் உறுதிப்பாடுகளை அவுஸ்திரேலியா மிகவும் மதிக்கின்றது.“ என்று கூறினார்.

மேலும் “இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து, ஆட்கடத்தல்காரர்களுக்கு வலுவான செய்தி ஒன்றை வழங்குவதோடு, சட்டவிரோத ஆட்கடத்தலை மேற்கொள்வோருக்கும், அவ்வாறு சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோருக்கும் அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்ற செய்தியை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து வழங்குகிறது.” என்றார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன,“இந்த நன்கொடை மூலம், எமது பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றுக்கு மேலதிகமாக ஆட்கடத்தலைத் தடுத்தல், குற்றச் செயல்கள் மற்றும் சூழல் மாசடைதலைத் தடுத்தல் என்பனவற்றுக்கும் இவை பயன்படுத்தப்பட உள்ளது” என்றார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்தில் தமிழர்கள் தஞ்சம் கோரி அயல் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச் சென்றனர். 2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னரும் தமிழர்கள் இலங்கை படையினரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி இவ்வாறு சட்டமுறையற்றப்பணயத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply