Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியாவை நோக்கி 6.5 இலட்சம் குடியேறிகள்: புலம்பெயரும் மக்கள் வரிசையில் இலங்கையர்கள்

அவுஸ்திரேலியாவை நோக்கி 6.5 இலட்சம் குடியேறிகள்: புலம்பெயரும் மக்கள் வரிசையில் இலங்கையர்கள்

வரும் ஜூன் 2025ல் அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 9 இலட்சம் பேருடன் அதிகரித்து இருக்கும் என அவுஸ்திரேலிய அரசு அனுமானித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 இலட்சம் குடியேறிகள் அந்நாட்டை நோக்கி வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசு விரைவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டுக்கு பின்னர், அவுஸ்திரேலியா காணும் மிகப்பெரிய மக்கள் தொகை அதிகரிப்பாக இது இருக்கும் என The Demographics குழுவின் ஆய்வு இயக்குநர் சைமன் தெரிவித்திருக்கிறார். நல்ல கல்வி, வேலை வாய்ப்புகளை தேடி இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், சீனாவைச் சேர்ந்த குடியேறிகள் அதிகளவில் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாகக் கூறுகிறார் La Trobe பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கிரண் ஷிண்டே.

அதே சமயம், குடியேறிகளின் வருகை தங்குமிட நெருக்கடிக்கு அல்லது வீட்டு வாடகை அதிகரிப்புக்கு வித்திடும் எனக் கருதப்படுகிறது. இந்த எண்ணிக்கை அச்சுறுத்தலாக தோன்றினாலும், உண்மையான காரணமின்றி அதிக மக்கள் தொகை குறித்து அவுஸ்திரேலியர்கள் பீதியடைய கூடும் என கிரண் ஷிண்டே கூறுகிறார்.

“இந்த எண்ணிக்கை குறித்த கூச்சல் எப்போதும் அரசியல் ரீதியிலானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சொல்லப்பட்ட எண்ணிக்கை நடைமுறையில் பிரதிபலிக்காது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.

விசா பரிசீலனைக்கு காலம் எடுக்கும் என்றும் புலம்பெயர எண்ணும் மக்கள் மனதை மாற்றி கொள்ளலாம் என்றும் உலக அளவிலான சவால்கள் புலம்பெயர்வு சூழலை மாற்றும் என்றும் La Trobe பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version