அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

282 Views

“நாம் அழிந்து போவோம் என்று அவுஸ்திரேலியா எண்ணியது”. நாம் இன்றைய நாளில் (ஜனவரி 26) மறுமலர்ச்சி பெறும் பூர்வகுடிகள்.  

அல்ஜசீரா ஊடகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரான் கிரான்ட் (Stand Grant) குடும்பத்தினர் பூர்வகுடிகளின் மொழி கலாச்சார மறுமலர்ச்சியில் முன்னணியில் நிற்பவர்கள். இங்கு அவர் தனது கதையை சொல்கிறார்.

வேற்று மொழி ஒன்றை பேசியே நான் வளர்ந்தேன்.

200 ஆண்டுகளுக்கு முன் குற்றவாளிகளை கொண்டுவந்த கப்பல்களில் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட மொழி அது. எனது முன்னோர்கள் அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட போது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மொழி.

1830 இல்,  மேல்மத்திய நியூசவுத் வேல்சின் விராஜூவரி (Wiradjuri) பகுதியை சேர்ந்த எனது மக்கள் மேல் இராணுவ சட்டம் போடப்பட்டது. எனது மக்களை கண்டதும் சுடும் சட்டம் இது. பிரித்தானிய வந்தேறிகள் கூட்டமாக வேட்டைக்கு சென்று விராஜூவரி மக்களை சுற்றி வளைப்பார்கள். download அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

இந்த வேட்டையில் இருந்து தப்பியவர்களை இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலோ அல்லது கிறிஸ்தவ மிசனரிகளிடமோ தள்ளி விட்டார்கள். அவர்கள் தங்கள் மொழியை பேசுவதோ, தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவதோ, தங்கள் சடங்குகளை நடத்துவதோ தடை செய்யப்பட்டது.

எனது மக்களும் அவர்கள் பேசிய மொழியை போலவே அழிந்தொழிந்து போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

“பூர்வகுடிகள்” அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனமாகவே கருதப்பட்டது. அழிந்து கொண்டிருக்கும் இனத்தின் அடையாளங்களை அழித்துவிடுவது பற்றி வந்தேறிகள் பேசினார்கள்.

1901 இல் அவுஸ்திரேலிய ஒரு நாடாகியபோது, அதை நிறுவியவர்களுள் ஒருவரான அல்பிரட் டீக்கின் “நூறு ஆண்டுகளுக்குள் அவுஸ்திரேலியா வெள்ளையர் மட்டுமே உள்ள நாடாகிவிடும். கறுப்பு தோலுள்ளவர்கள் இங்கு இல்லாமல் போய்விடுவார்கள். தெற்கில் பூர்வகுடி இனம் அழிந்துவிட்டது. ஏனைய இடங்களிலும் அழிந்து கொண்டு வருகிறது.” என்று எதிர்வு கூறினார்.

பூர்குடி பாதுகாப்பு குழு ஒன்று நிறுவப்பட்டது. பூர்வகுடிகள் வாழ்க்கையில் இதன் அதிகாரம் பயங்கரமானது. எனது குடும்பம் எங்கு வாழ வேண்டும்,யாரை திருமணம் செய்ய வேண்டும், எங்கள் குழந்தைகளை நாமே வளர்த்தெடுக்கலாமா போன்ற விடயங்களை தீர்மானிக்கும் அதிகாரம் இக்குழுவுக்கு இருந்தது.

வெள்ளையராக சிந்தி, வெள்ளையராக நட, வெள்ளையரன இரு

20ம் நூற்றாண்டுகள் முழுவதும் ஒரு இனவாத விஞ்ஞானம் பூர்வகுடி மக்கள் மேல் திணிக்கப்பட்டது.தன்வயமாக்கல் (assimilation) என்றவொரு கொள்கை பூர்வகுடி மக்களை இல்லாதொழிக்கும் முயற்சியாக நடைமுறைபடுத்தப்பட்டது. “கமன்வெல்த் உடன் தனவயமாக்கப்படல்” என்ற கொள்கையாக இது பிரகடனப்படுத்தப்பட்டது.

இக்கொள்கையை எடுத்துக்காட்டும் போஸ்டரில் ஒரு கருப்பு தோலுள்ள தாயின் மகள் பழுப்புநிற தோலுள்ளவராகவும் அவருடைய பேரன் நீலநிற கண்ணுடனும் பொன்னிற மயிருடனும் காட்டப்படுகிறார். மூன்று சந்ததிகளில் கருப்பிலிருந்து வெள்ளையாக.

கலப்பின பழுப்புநிற பிள்ளைகள், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளை வெட்டும் நோக்குடன், அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டன. எனக்கு தெரிந்த ஒவ்வொரு பூர்வகுடியினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையே ‘திருடப்பட்ட சந்ததி’ (stolen generation) என்று இன்று நாம் அழைக்கிறோம்.

aboriginal children அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

எனது அம்மம்மாவின் சகோதரி அவருடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு பூர்வகுடி சிறுமிகளுக்கான ஒரு ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு வெள்ளையர் குடும்பங்களில் வீட்டு வேலைகள் செய்வதற்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இச்சிறுமிகள் வெள்ளையர்களை திருமணம் செய்து வெள்ளை தோல் பிள்ளைகளை பெற்றெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவர் தூங்கிய இடத்திற்கு மேலாக “வெள்ளையராக சிந்தி, வெள்ளையராக செயற்படு, வெள்ளைரன இரு” என்று எழுதப்பட்டிருந்தது.

இத்துணை அழிவுகளுக்கு பின்னரும் நாங்கள் அழிந்து போகவில்லை. நகரங்களின் எல்லைகளில் பூர்வகுடிகள் ஒன்று கூடினார்கள். அங்கு முடிவில்லா ஏழ்மையிலும் புறக்கணிப்பு மத்தியிலும் வாழ்ந்தார்கள்.

நாங்கள் அழிந்து போகவில்லை. ஆனால் எங்கள் மொழி அழிந்து போனது. 1963இல் நான் பிறந்தபோது நாங்கள் ஆங்கிலம் பேசினோம். இடையிடையே பழைய மொழியின் சில சொற்களை மட்டும் சேர்த்துக்கொண்டோம்.

பிரித்தானியா அவுஸ்திரேலியா மேல் படையெடுத்த போது இங்கு 250 தனித்துவமான மொழிகள் பேசப்பட்டன. 800க்கு அதிகமான பேச்சுவழக்குகள் இருந்தன. அவற்றில் அதிகமானவை அமைதியாகிவிட்டன. மிஞ்சி இருப்பவற்றில் 90 வீதமானவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

மொழியின் இளம் துளிர்கள்

பூர்வகுடிகள் அவ்வளவு இலகுவாக சரணடைய மாட்டார்கள். இன்று அவுஸ்திரேலியா என்று அழைக்கப்படும் இந்த நிலத்தில், ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், எனது முன்னோர்கள் 65,000 ஆண்டுகள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

42,000 ஆண்டுகள் பழமையான ஒரு மனித எலும்புக்கூடு இங்கு இறந்தவர்களை சடங்குடன் அடக்கம் செய்ததற்கான மிகப்பழைய ஆதரமாக கருதப்படுகிறது.

உலகத்திலேயே தொடர்ச்சியாக பண்பாட்டுடன் வாழ்ந்த மிகவும் பழமையான மக்களாக நாம் உள்ளோம்.

மொழியின் இளம் துளிர்கள் எட்டிப்பார்க்கின்றன. கலாச்சார ஆன்மிக மறுமலர்ச்சியின் ஒரு அங்கமே இது. இந்நிலத்தின் முதல் மக்களின் சந்ததியினர் அவர்களுடைய பழமையான மொழியை மீண்டும் பேசுகிறார்கள்.685723207 அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

இம்மறுமலர்ச்சியின் முன்னணியில் எனது தந்தையும் இருந்தார்.

அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய பாட்டன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதை அவர் கண்டார். எனது தந்தையின் பாட்டன் எனது தந்தையுடன் எனது ஊரின் தெருவில் விராஜூவரி மொழியில் பேசியதற்காகவே சிறையிலடைத்தார்கள்.

50 ஆண்டுகளின் பின் எனது தந்தை அவரது மொழியை பாதுகாத்ததற்காக அவுஸ்திரேலிய அரசால் கௌரவிக்கப்பட்டார். எத்துணை அதிசயமான ஒரு பயணம்.

என் வாழ்க்கையில் மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுவது

எனது தந்தை கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார். கருப்பு தோலுடன் இருப்பதே குற்றமாக கருதக் கூடிய நாட்டில் ஒரு கருப்பு தோல் மனிதராக. அவருக்கு முழுமையான கல்வி மறுக்கப்பட்டது. என்னையும் எனது பல சகோதர சகோதரிகளையும் தனது கைகளின் பலத்தைக்கொண்டே வளர்த்தார்.

ஏராளமான பூர்வகுடி ஆண்களைப் போலவே அவரும் காவல்துறையால் கொடுமையாக நடத்தப்பட்டார்.

இருந்தும் அவர் ஒருபோதும் தான் யார் என்பதை மறக்கவில்லை. அவருக்கிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அவருடைய பாட்டனின் நினைவுகளையும் அவரின் அன்பையும் எனது தந்தை இழந்துவிடவில்லை.

அவுஸ்திரேலியாவின் விளிம்பில் வாழ்ந்த இந்த மனிதரை, அவர் வயது 50களில் இருந்தபோது, ஜான் ரடர் என்னும் ஒரு வெள்ளையர், ஒரு மொழியியலாளர், தேடி வந்தார். விராஜூவரி மொழியை காப்பாற்றுவதில் ஜான் ரடருக்கு(John Rudder)ஆர்வமிருந்தது.

250px John Rudder அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி தொடர்ந்த 20 ஆண்டுகளில் இந்த இரு மனிதர்களும் விராஜூவரி மொழியின் முதன்முதலாவது அகராதியை தொகுத்தார்கள். அந்த மொழியை கற்பிப்பதற்கான மையங்களை விராஜூவரி நிலமெங்கும் திறந்தார்கள். சார்ல்ஸ் ஸ்ருவர்ட் பல்கலைக்கழகத்தில் விராஜூவரி ஆய்வுகளுக்காக ஒரு முதுகலை படிப்பையும் நிறுவினார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு இதே பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது .

எனது தந்தையின் பெயர் Stan Grant. அவருடைய பெயர் எனக்கு சூட்டப்பட்டதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன்.

நாங்கள் அழியவில்லை இன்றும் இருக்கிறோம்

அவரும் எனது தாயாருமே இன்று நான் நானாக இருப்பதற்கு காரணம். இருவரும் எம்மை தைரியமானவர்களாகவும் தன்மானமுள்ளவர்களாகவும் வளர்த்தர்கள். எங்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்து பாதுகாத்தார்கள். எங்கள் கதைகளை உயிரோட்டத்தோடு பாதுகாத்தார்கள். நான் யாரென்று எனக்கு கற்பித்தார்கள்.

இன்றைய அவுஸ்திரேலியா நாளில், படையெடுப்பு நாளில் நான் அவர்களை நினைக்கிறேன். எனது குடும்பத்தவர்கள் எல்லேரையும் நினைக்கிறேன். நாங்கள் இன்றும் அழியாமல் உயிரோடு இருப்பதை நினைக்கிறேன்.

அவுஸ்திரேலியா என்ற மாபெரும் பொய்யை வெளிப்படுத்தும் உண்மை நாங்கள். இந்த நிலம் ஆளில்லா நிலமென்று சொல்லி பிரித்தானியா இதை தனது என்று சொந்தம் கொண்டாடியது.இங்கு வாழ்ந்துகொண்டிருந்த மானிடத்தை அவர்கள் காணவில்லை.

நாங்கள் அழிந்து விடுவோம் என்று அவுஸ்திரேலியா நினைத்தது. நாங்கள் கரைந்தொழிந்து போவோம் என்று நினைத்தது.australia day 3 1 அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

பிரித்தானிய கடலோடியான ஜேம்ஸ் குக் தனது கொடியை இங்கு நாட்டி எமது நிலத்தை தனதென்று கையகப்படுத்தி 250 ஆண்டுகளுக்கு பின்னர் நாங்கள் திரும்ப அவர்களுடன் பேசுகிறோம். எமது சொந்த மொழியில்.

Stan Grant – ஊடகவியலாளர், நூலாசிரியர், பட இயக்குனர் – அவுஸ்திரேலியாவின் ஆதி தேசிய மக்களான  விராஜூவரி (Wiradjuri), கமில்றோய் (Kamilaroi) மற்றும் டறவல் (Dharawal) இனங்களை சார்ந்தவர்.

நன்றி அல்ஜசீரா

 

Leave a Reply