அரச தலைவர் தேர்தலில் சிங்களத் தலைவர்களை தமிழர்கள் ஆதரிக்கக்கூடாது – சிவாஜி

சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்களத் தலைவர்களை ஆதரிக்கக்கூடாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் தமிழ் மக்கள் விவாதித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது. கூட்டமைப்பும் அதனையே தமிழ் மக்களுக்கு செய்துள்ளது.

சிங்களத் தலைவர்களை நம்பும் நிலையில் தற்போது தமிழ் மக்கள் இல்லை. கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு முன்னைய அரசு தமிழ் மக்களுக்கு செய்ததையே செய்துள்ளது.

அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவரும் நிலையிலும், அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளனர், நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது, அரசியல் தீர்வு முடக்கப்பட்டுள்ளது, நீதி விசாரணைகள் இடம்பெறவில்லை.

சிறீலங்கா அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வருடத்திற்குள் தீர்வு என கடந்த நான்கு வருடங்களாக கூறி வருகின்றது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.