Tamil News
Home செய்திகள் அரசியல் கைதிகள் விடுதலைக்கான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம்! – செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகள் விடுதலைக்கான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம்! – செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரின் நேர்காணலின் முழுமையான வடிவம்.

கேள்வி : தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?

பதில்: கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரிலே வெளிவிவகார அமைச்சரை தமிழ்க் கட்சியினர் எல்லோரும் சந்தித்து, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், இது சம்பந்தமாக பேசுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கையொப்பமிட்டு கடிதம் மூலம் கேட்டிருந்தோம். அந்த வகையிலேயே, எங்களிடம் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து தனக்குத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியான வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை எம்முடன் கலந்துரையாட ஜனாதிபதி அனுப்பியிருந்ததாக தினேஸ் குணவர்த்தன எமக்குக் கூறினார்.

தினேஸ் குணவர்த்தனவின் உரையாடலின் போது எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விபரங்களையும் நாங்கள் கையளித்திருக்கிறோம். அவரிடம் உரையாடி இருக்கிறோம். எமது விபரங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறி, ஜனாதிபதி எம்மை சந்திப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தருவதாக தினேஸ் குணவர்த்தன எம்மிடம் கூறியிருக்கின்றார்.

சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் சம்பந்தமாகவும், வெளியிலே அவர்களுடைய குடும்பங்கள் படுமோசமான ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம். முக்கியமாக இந்த கொரோனா தொற்று என்பது சிறைக் கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கைதிகளின் விடுதலை பற்றி எடுத்துக் கூறினோம். அவர்களை பிணையில் விடுவது அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுவது என்பது பற்றியும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசியிருந்தோம்.

இருந்தாலும் அனைவரையும் விடுதலை செய்வது நன்றாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய பொதுவான விடயமாக இருந்தது. இந்த கலந்துரையாடல் மிக நேர்த்தியான முறையிலே நடைபெற்றது. இதற்கு அரசியல் கைதிகளுடைய குடும்பங்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். அந்த வகையிலே நாங்கள் அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக அடுத்த ஜனாதிபதி சந்திப்பிலே ஒற்றுமையாக சென்றுகுறித்த விடயம் தொடர்பாக பேச இருக்கிறோம்.

கேள்வி: இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்கள் தவிர வேறு தரப்புக்களுடனும் பேசப்படுகின்றதா?

பதில்: இது தொடர்பாக இங்கே இருக்கின்ற, எங்களோடு செயற்படுகின்ற உயர் ஸ்தானிகர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அதே போல வெளி நாடுகளில் இருந்து வந்து சந்திப்புகளை மேற்கொள்பவர்களுக்கும் இது தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டி வருகிறோம். அவர்களுடைய அழுத்தங்களும், அவர்களுடைய செயற்பாடுகளும் இதிலே இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். அந்த வகையிலே உலக நாடுகளிலே இருக்கின்ற, இங்கே இருக்கின்ற உயர் ஸ்தானிகர்களுக்கும் அரசியல் கைதிகளினுடைய உடல்நிலை சம்பந்தமாக எடுத்துக்கூறி அவர்களும் இதற்கும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகளில் அதிகளவு சட்டவாளர்கள் இருக்கும் போது இதனை நீதிமன்றங்கள் ஊடாக நகர்த்துவது ஏன் கடினமாக உள்ளது?

பதில்: ஏற்கனவே நீதிமன்றத்திலே இவர்களின் பிரச்சினை இருக்கின்றபடியால் அதாவது, இலங்கையை பொறுத்தமட்டிலே உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த வழக்குகள் நிலுவையிலே இருக்கின்றன. அந்த நிலுவையிலே இருக்கின்ற வழக்குகளை துரிதமாக்குகின்ற சூழல் இங்கே மிக கால தாமதமாக்கப்படுகின்றது. அதைவிட எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான விளக்கம் கொடுக்கின்ற, அதாவது கைது செய்யப்பட்ட அல்லது கைது செய்த பொலிசாரோ அல்லது புலனாய்வுத் துறையினரோ அல்லது அதற்கான ஆதாரங்களை செயற்படுத்துகின்றவர்களின் வருகை என்பது குறைவாக இருக்கின்றபடியால் அவர்களுடைய வழக்குகள் மிகவும்  தாமதமடைகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இதனால் எங்களுடைய தமிழ்க் கட்சிகளில் இருக்கின்ற வழக்கறிஞர்கள் நிச்சயமாக அதிலே வாதாடுகிறார்கள். அல்லது அந்த கட்சியினுடைய வழக்கறிஞர்கள் அதிலே தொடர்போடு வாதாடுகின்ற ஒரு பொறுப்பிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அது இல்லாமல் இருக்கவில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்த விடயத்திலே ஒரு கால தாமதமாவது இந்த வழக்குகள் எல்லாம், சாட்சிகள் வராத ஒரு சூழல், மற்றும் வழக்கு எடுக்காத ஒரு நிலை என்பனவே காரணமாகக் காணப்படுகிறன. அதனாலே இந்த வழக்குகள் மோசமான ஒரு பின்னடைவை சந்திக்க கூடியதாக இருக்கிறது. அதனால், எங்களுடைய வழக்கறிஞர்கள், அதை கட்சி சார்ந்த வழக்கறிஞர்களோ, அல்லது எல்லோரும் சேர்ந்து தங்களுடைய வழக்கறிஞர்களை அதற்கு பயன்படுத்துகின்ற ஒரு நிலை இப்பொழுது தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படவுள்ள வாய்வழி அறிக்கையில் இடம்பெறுமாறு அரசியல் கைதிகள் தொடர்பான இலங்கை அரசின் பாரபட்ச நடவடிக்கைகளை ஆவணப்படுத்த முடியுமா?

பதில்: நிச்சயமாக, ஐ.நா சபையினுடைய தீர்மானத்திலே இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலை சம்பந்தமாக கூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இந்த மகஜர்களை உயர் ஸ்தானிகராலயங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இப்பொழுது அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடமும் கொடுத்திருக்கிறோம். ஐ.நா சபையிலே இந்த வழக்கினுடைய பின்னணி என்ன? அல்லது வழக்குகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னென்ன கட்டங்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை நாங்கள் நிச்சயமாக சாட்சிகளோடு, அங்கே சொல்ல வேண்டும். இந்த விடுதலை சம்பந்தமான ஒரு நிலைப்பாடு அதிலே இருக்கின்றபடியால் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கான விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும், கொடுப்போம்.

Exit mobile version