அரசியல் கட்சிகளும், தமிழ்தேசிய கட்சிகளும்..!

இலங்கையில் ஏற்கனவே மொத்தமாக 83, அரசியல் கட்சிகள் இலங்கை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தும் தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 76, மட்டுமே இலங்கையில் உள்ளது .

7, கட்சிகள் இயங்கு நிலையில் இல்லை.. இந்த 76, கட்சிகளிலும் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகளாக..

  1. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி.
  2. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.
  3. தமிழர் விடுதலை கூட்டணி.
  4. தமிழீழ விடுதலை இயக்கம்.
  5. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி.
  6. ஈழவர் ஜன நாயக முன்னணி.
  7. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி.
  8. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.

இந்த எட்டு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பதிவு செய்யாத ஓரிரு கட்சிகள் மட்டுமே தமிழ்த்தேசிய கொள்கை அடிப்படையில் இணைந்த வடகிழக்கில் இணைப்பாட்சியை(சமஷ்டி) வலியுறுத்தி அகிம்சை ரீதியாக போராடும் கட்சிகளாக அல்லது அந்த கொள்கையை முன்னிறுத்தி தேர்தல் அரசியல் செய்யும் கட்சிகளாக  உள்ளன.

ஏனைய 68, கட்சிகளும் தமிழ்தேசிய கொள் கையோ, சமஷ்டி தீர்வையோ விரும்பாத அபிவிருத்தி, சலுகை, பதவிகளை முன்னிறுத்தி தமது கொள்கைகளை கொண்ட கட்சிகளாகும். இந்த வித்தியாசத்தை சரியாக உணர்ந்தால் மட்டுமே தமிழ்தேசிய கொள்கையுள்ள கட்சிகளை இனம்காணலாம். தமிழ்த்தேசியவாதிகளாக செயல் படலாம்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன?

தமிழ் இனம், தமிழ்மொழி(தாய்மொழி) தமிழர் நிலம், (தமிழ்த்தேசம்)இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம், தமிழர்களின் பண்பாடு.தமிழர் மாண்பு இவைகளுடன்  எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம் ஆகும்.  தமிழ்த்தேசியம் என்பது அரசியலுக்கான சொல் இல்லை, அது தமிழ் இனத்துக்கான வாழ் வியலை குறிக்கும், இனத்துக்கான வாழ்வியலை உறுதிப்படுத்தவே தமிழ்த்தேசிய அரசியல் முக்கியத்து வம் பெறுகிறது.

இது 75, வருடமாக அகிம்சை, ஆயுதம், இராஜ தந்திரம் என நீண்ட வரலாறுகளை கொண்டு அரசியல் செயல்பாடுகள் முன்னகர்த்தப்படுகிறது. இந்தவரலாற்றில் வீரம், தியாகம், துரோகம், எதிரி, விரோதி,சோதனை, வேதனை, ஏமாற்றம், வெற்றி, தோல்வி என பல படிகளை கடந்து பயணிக்கிறது.

தமிழ்தேசிய அரசியல் கட்சிகளில் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும், செயல்பாட்டாளர் களாகவும், அங்கத்தவர்களாகவும் உள்ள அனைவருமே வடகிழக்கில் பிறந்து அந்த மண்ணோடு உணர்வோடு, கலை பண்பாடு, மொழியுடன் வாழ்ந்தவர்களுக்கே மண் விடுதலைக்கான உணர்வு இயல்பாக வரும்.

அப்படி இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலை ஏனைய 68, கட்சிகளில் ஒன்றாகவே கருதுவார்கள். ஒருவருடைய பிறப்பும், வாழும் சூழலுமே அந்த மனிதரின் குணநலனை தீர்மானிக்கும்.இந்த உண்மையை விளங்கவேண்டியது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் உள்ள அனைவரினதும் கடமையாகும்.

உண்மைகளை மறைத்து உரிமை அரசியலை உணர்வுடன் முன்எடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை புரிவது நல்லது..!