அமெரிக்க தூதரக வளாகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று 3 ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஈராக் நாட்டின் தலைநகர் பக்தாத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல (கிறீன் ஸோன்) பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இந்த மூன்று ஏவுகணைகளில் இரண்டே அமெரிக்க தூதரகம் அருகில் வீழ்ந்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திச் சேவை அறிவித்துள்ளது.

இதன் அருகே 3 ஏவுகணைகள் திடீரென வந்து வீழ்ந்துள்ளன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட காயமடைந்தோர் விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இதனை அடுத்து பொலிஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை இராணுவ படை குழுக்கள் நடத்தியுள்ளதாக  அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள வேளையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அச்செய்திகள் மேலும் கூறியுள்ளன.