அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு  – மக்கள் கற்றுக்கொடுத்த பாடம் – வேல்ஸில் இருந்து அருஸ்

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முன்னாள் அரச தலைவரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளார். அதாவது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரீஸிற்கும் டிறம்பிற்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிகழலாம் எனவும், மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வெற்றியீட்டலாம் எனவும் கருத்துக் கணிப்புக்கள் கூறப்பட்டபோதும், தேர்தல் முடிவுகள் பலரை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

தேர்தல் தோல்வியின் பின்னர் வழமை யாக எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் தமது வாக்காளர் களுக்கு உரையாற்றுவதுண்டு, ஆனால் அதனையும் இரத்துச் செய்யும் தோல்வியை கமலா ஹரீஸ் சந்தித்திருந்தார். தேர்தல் பரப்புரைகளுக்காக ஜனநாயகக் கட்சி 996 மில்லியன் டொலர்களையும், குடியரசுக் கட்சி 338 மில்லியன் டொலர்களையும் பெற்றிருந்தது. ஆனால் டிறம்பை விட ஏறத்தாழ 3 மடங்கு நிதியை பெற்று தேர்தல் பரப்புரைகளுக்கு செலவிட்டபோதும் ஹரிஸினால் வெற்றியீட்ட முடியவில்லை.

இந்த தேர்தல் முடிவு மட்டுமல்லாது பல நாடுகளின் தேர்தல் முடிவுகள் கூட பல முதன்மையான அரசியல் கட்சிகளுக்கு பாடங் களை கற்றுக்கொடுத்துள்ளது. அமெரிக்கத் தேர் தல் முடிந்த மறு நாள் ஜேர்மன் அரசின் கூட் டணிக் கட்சி ஆதரவை விலக்கியதால் அங்கு அரசு வீழ்ந்துவிடும் நிலையை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியால் மற்றும் உக்ரைன் போரினால் ஜேர்மனின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஜேர்மனின் நிதி அமைச்சர் தூக்கிய போர்க்கொடியே அதற்கு காரணம்.

அமெரிக்காவின் தேர்தலிலும் முக்கிய பேசுபொருளாக பொருளாதார நெருக்கடியும், தற்போது இடம்பெறும் உக்ரைன் மற்றும் இஸ் ரேல் – பலஸ்தீனப் போருமே அமைந்திருந்தன. வழமையாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு வழங் கும் அமெரிக்காவின் மிச்சிக்கன் மாநில மக் கள் இந்த முறை தமது முடிவை மாற்றி குடியரசு கட்சிக்கு வாக்குகளை வழங்கியதையும் இங்கு குறிப்பிடலாம்.

மிச்சிக்கன் மாநிலம் பெருமளவான முஸ் லீம் மற்றும் அரபு மக்களைக் கொண்ட மாநிலம். தற்போதைய பைடன் அரசின் கொள்கைகள், காசாவில் இடம்பெறும் இனஅழிப்பு என்பன இந்த மாற்றத்திற்கான காரணம். டிறம்பை பொறுத்தவரையில் அவரின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கியிருந்தார். ஜெருசலத்தை கூட இஸ்ரேலின் தலைநகராக அறிவித்திருந்தார். கோலன் குன்று பகுதியும் இஸ்ரேலின் பகுதி என தெரிவித்திருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து கூட அமெரிக்கா வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்தவர்.

ஆனாலும் அவரை விட அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரை முஸ்லீம் மக்கள் வெறுப்பதை தான் தேர்தல் முடிவு காட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு கடந்த ஒரு வருடத்தில் 17 பில்லியன் டொலர்களையும், உக்ரைனுக்கு கடந்த 3 வருடங்களில் 175 பில்லியன் டொலர்களையும் கொடுத்து போருக்கான ஊக்கத்தை பைடன் அரசு வழங்கியது என்பது அமெரிக்காவின் பொரு ளாதாரத்தை கடுமையாக பாதித்ததாக அமெரிக்க மக்கள் கருதுகின்றனர்.

போருக்கு வழங்கிய நிதி ஒருபுறம் இருக்க போரினால் உலகில் ஏற்பட்டுவரும் மாற்றம் அதாவது செங்கடலின் ஊடான வர்த்தகத்தின் பாதிப்பு, உலக பணப்பரிமாற்றத்தில் இருந்து டொலர் அந்நியப்படுவது போன்றவை அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றது.

பணவீக்கம், ஏறிவரும் கடன் சுமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் உலகச் சந்தையில் அமெரிக்க டொலரின் பாவனை வீழ்ச்சி என்பன அமெரிக்க மக்களை தமது நாடு தொடர்பில் சிந்திக்க வைத்துள்ளது. அதாவது அங்கு ஒரு தேசியவாதம் உருவாகிவருகின்றது.

எனவே தான் அந்நிய நாடுகளில் இடம் பெறும் போர்களை நிறுத்துவேன் என்ற டிறம்பின் கோசத்தை மக்கள் ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரிகின்றது. முன்னர் ஈராக் மீதான போரை ஆதரித்த மற்றும் அதனை மேற்கொள்ள உதவியதன் தந்தை எனப்படும் டிக் சென்னி கூட ஹரீசுக்கான ஆதரவில் இருந்து வெளியேறி போரை தற்போது தான் வெறுப்பதாகக் கூறுகின்றார். மக்கள் போர்கள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனவே தான் அமெரிக்க மக்கள் அனை வரும் இணைந்து டிறம்பை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது மட்டுமல்லாது, அவருக்கு செனட்சபை மற்றும் கீழ்சபையின் பெரும்பான்மை பலத்தையும் அவருக்கு வழங்கியுள்ளனர். அதா வது டிறம் தான் நினைத்ததை செய்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்க மக்கள் நினைத்தார்களோ தெரியாது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது என்றால் ஜனநாயகக் கட்சியின் கடந்த கால ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாக அதனை பார்க்கலாம்.

டிறம்பின் வாக்குறுதிகளில் பல உடனடியாக நிறைவேறுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், யாராலும் எதிர்வுகூற முடியாதவரா கவே அவரின் நடத்தைகள் இருப்பதுண்டு, 2017 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையிலும் அவர் பதவியில் இருந்தபோது ஈரான் மற்றும் சீனாவுடன் அதிக கடும்போர்க்கை கடைப் பிடித்திருந்தார். ஈரானின் காட் படையின் கட்டளை அதிகாரியும், ஹிஸ்புல்லாக்கள் மற்றும் ஹமாஸ் படையினரின் படைக் கட்டமைப்பை பலப்படுத்தியதில் முன்னனி வகித்தவருமான ஜெனரல் சொலமனியின் படுகொலை என்பது 2020 ஆம் ஆண்டு டிறம் பதவியில் இருந்தபோது தான் இடம்பெற்றிருந்தது. எனினும்; அதற்கு முன்னைய அரசுகளைப்போல மிகப்பெரும் போரை டிறம் நடத்தவில்லை என்பது உண்மை தான். தேசிய பாதுகாப்பை தக்கவைத்துக் கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்ற அவர் நினைத் திருக்கலாம்.

அதேசமயம் 2019 ஆம் ஆண்டு வட கொரியாவக்கு சென்று வடகொரிய அதிபரையும் சந்தித்திருந்தார். அதாவது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் வரிகளை அதி கரிப்பது தான் டிறம்பின் முதன்மையான நடவடிக் கையாக முன்னர் இருந்தது. தற்போதும் அவருக்கு உறுதுணையாக அமெரிக்காவின் மிகப்பெரும் செல்வந்தர்கள தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக இலோன் முஸ்க் டிறம்பின் தேர்தல் செலவுக்காக 118 மில்லியன் டொலர்களை வழங்கியதுடன், அவரின் ருவிட்டர் சமூகலைத்தளமும் டிறம்பின் வெற்றிக்காக கடுமையாக தனது உழைப்பை வழங்கியிருந்தது.

அதாவது டிறம்பின் வெற்றி என்பது அமெரிக்க வர்த்தகர்களுக்கு கிடைத்த வெற்றி யாகவே பார்க்கப்படுகின்றது. அதனை உறுதிப் படுத்துவது போலவே டிறம்பின் வெற்றி அறிவிக் கப்பட்ட அன்று அதாவது புதன்கிழமை(6) அமெரிக்காவில் உள்ள 10 செல்வந்தர்களின் செல்வம் 64 பில்லியன் டொலர்களால் அதிகரித் திருந்தது. பங்குச்சந்தையின் அதிகரிப்பு அது. அதில் முஸ்கின் சொத்தின் மதிப்பும் 26 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருந்தது.

அமெரிக்கர்களுக்கு இது சாதகமாக இருந்தாலும், டிறம்பின் வருகையால் அதிகம் பாதிக் கப்படப்போவது ஐரோப்பா தான். அமெரிக்காவை நம்பி தமது நிதிகளை வாரி வழங்கி உக்ரைன் போரை முன்னின்று நடத்தியவர்கள் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

டிறம்பை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் கூடி ஆரய வேண் டும் என தெரிவித்துள்ள பிரான்ஸின் அதிபர் இமானுவேல் மக்ரோன் அதற்கான நாளையும் குறித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னராகவே ஜேர்மன் அரசு வீழ்ச்சியடைந்து விடலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உலகம் முன்னைய ஒழுங்கிற்கு மீண்டும் திரும்பப் போவதில்லை. அமெரிக்காவும் தனிப்பெரும் வல்லரசாக வலம்வரவும்முடியாது அதனை தான் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கள் இந்தவாரம் அவுஸ்திரேலியாவில் இடம் பெற்ற மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த புதிய ஒழுங்கிற்குள் தப்பிப் பிழைக்கும் வழியை தான் ஆசிய நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் தேடி வருகின்றன. அது ஐரோப்பாவுக்கும் பொருந்தும்.