‘அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி. சொல்லப்போனால் அவர்கள் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர்.’ என முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். தற்போதைய சூழலில் கமலா ஹாரிஸுக்கு சற்றே ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழல் எலான் மஸ்க் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை நேர்காணல் செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நேர்காணலில்அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகியது, கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவின் எதிர்காலம் என்னவாகும், காலநிலை மாற்றம், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்…
பைடன் விலகல்:‘பைடனுடன் நான் மேற்கொண்ட முதல் நேரடி விவாதத்தில் அவரை நான் மிக மோசமாக தோற்கடித்தேன். அதுவே அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேற நிர்பந்தித்தது. அதையும் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி. சொல்லப்போனால் அவர்கள் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர்’ என்றார்.
துப்பாக்கிச் சூடு: ‘அன்று துப்பாக்கிச் சூடு நடந்த அத்தருணத்தில் என் காதுகளில் புல்லட் துளைத்தது என்பதை நான் உடனே உறுதிப்படுத்திக் கொண்டேன். நான் மட்டும் என் தலையை சாய்க்காமல் இருந்திருந்தால் அது என் தலையில் பாய்ந்திருக்கும் என்பதையும் உணர்ந்தேன். அந்த நொடியில் நான் அச்சம் கொண்டேன். இருப்பினும் நான் திடமாக இருப்பதாகக் காட்டவே எழுந்த நின்றேன். அந்தத் தருணத்தில் நான் இறைவன் இருப்பதை உணர்ந்தேன். கடவுள் மறுப்பாளர்கள் கடவுளின் இருப்பைப் பற்றி பரிசீலிக்கலாம். நான் இப்போது கடவுளை நம்புகிறேன். மிகவும் அதிகமாக நம்புகிறேன்’ என்றார்.
உக்ரைன் போர்: ‘அமெரிக்க அதிபராக பைடன் இருப்பதால் மட்டுமே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. நான் அதிபராக இருந்தபோதும் ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் மீதொரு கண் இருந்தது. ஆனால் நான் தொடர்ந்து போர் வேண்டாம் என்று கூறி வந்தேன்.
இப்போது ரஷ்யா, சீனா, வட கொரியா அதிபர்கள் அவர்களின் விளையாட்டில் உச்சம் கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அவர்கள் நாட்டின் மீது அதீத அன்பு இருக்கிறது. ஆனால் அந்த அன்பு வித்தியாசமானது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கு ஒரு ஸ்திரமான அதிபர் தேவை. அத்தகைய நபரால் மட்டுமே ரஷ்யா, சீனா, வட கொரியாவை சமாளிக்க முடியும்’ என்றார்.
கமலா ஹாரிஸ் அதிபரானால்..! ‘அமெரிக்காவுக்கு சரியான அதிபர் இல்லை. ஜோ பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கிறது. அவருக்குப் பின் கமலா ஹாரிஸ் அதிபரானால் நிலைமை இன்னும் மோசமாகும். கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்துவிடுவார். அவருடைய பொருளாதார சிந்தனைகள் நாட்டுக்கு கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் பாரத்தை சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும்.அதுமட்டுமல்லாது அவர் சட்டவிரோத் ஊடுருவல்களை ஆதரிக்கிறார். அவருடைய இந்தக் கொள்கை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். ஏற்கெனவே அவர்களால் அமெரிக்காவுக்கு அளவுக்கு அதிகமான பிரச்சினை உள்ளது” என்றார்.