அமெரிக்க அதிபருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது

180 Views

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண்ணை அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் ரைசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் தங்கள் சோதனையின் போது கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்குள்ளே கடிதம் சென்றடைவதற்கு முன்னரே பாதுகாப்பு அதிகாரிகள் இதனைக் கண்டறிந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் ட்ரம்ப்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கனடா எல்லையில் பிடிபட்ட பெண் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில், அவர் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. அதையடுத்து அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவரின் சட்டைப் பையில் ரைசின் என்ற விஷம் இருப்பதை உறுதிப்படுத்த இரண்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

FBI (Federal Bureau of Investigation) மற்றும் இரகசிய சேவைப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply