அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ உதவி திட்டத்தினால் 46 மில்லியன் டொலர் பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இவை அடுத்த மாதமளவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று குறித்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டு மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, அவசரகால மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு உதவ தன்னார்வத்துடன் செயல்படும் குறித்த நிறுவனத்தை பாராட்டிய பிரதமர், அவர்கள் நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
அவசர காலத்தில் வழங்கப்படும் இந்த மருத்துவ உதவி இலங்கையர்களுக்கு பாரிய நிவாரணமாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.