Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நாட்டியது

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நாட்டியது

நிலவின் மேற்பரப்பில், காற்றில்லாமல் அசைவற்று இருக்கும்,   சீனாவின் செங்கொடி நாட்டப்பட்டிருக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன், அங்கிருந்து புறப்படுவதற்கு முன், சாங்கே -5 விண்கலத்தின் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளன.

1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார்.

1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா.

அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக, கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது.

இந் நிலையில், சீனக் கொடி நிலவில் நாட்டியது, அமெரிக்கா நிலவில் கொடி நாட்டிய போது இருந்த உற்சாகம் மற்றும் உத்வேகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தித் தாள் கூறியுள்ளது.

சாங்கே – 5 லேண்டர் வாகனம், சீனாவின் கொடியை நிலவில் நாட்டியுள்ளது. சீனாவின் கொடி 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும், சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டது. சீன கொடியின் எல்லா பகுதியிலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

உதாரணமாக, அதிக அளவில் குளிரைத் தாங்கும் என இந்த திட்டத்தின் தலைவர் லி யுன்ஃபெங் குளோபல் டைம்ஸிடம் கூறினார்.

பூமியில் பயன்படுத்தும் சாதாரணக் கொடி, நிலவில் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்காது என இந்த திட்டத்தின் மேம்பாட்டாளர் செங் சாங் கூறினார்.

நன்றி – பிபிசி

Exit mobile version