அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் பதில்

அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என தாம் நினைப்பதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அரச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது, “அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என நினைக்கிறோம். அவ்வாறு அவர்கள் செய்தால் ஈரானின் தீர்க்கமான பதிலடியைக் காண்பார்கள்“ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்திருந்தார்.

அவர் கூறுகையில், “பத்திரிகைகள் அளித்த தகவலின்படி ஈரான் அமெரிக்கத் தூதரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

ட்ரம்ப் இன் இந்த பேச்சுக்கு ஈரான் தற்போது பதில் அளித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் ஈரானின் முக்கிய போர்த் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். அத்துடன் இவ்விரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.