அன்ரன் பாலசிங்கம் மீதான கொலைவழக்கு: சென்னை வர்த்தகரின் மனு தள்ளுபடி

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களை சென்னையில் குண்டு வைத்து கொல்ல முயன்றதாக மதுரா போக்குவரத்து சேவை உரிமையாளர் வி.கே.டி பாலன் மீதான வழக்கை இரத்துச் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

1980களில் சென்னை பெசன் நகரில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் 1985ஆம் ஆண்டு அவரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் எவரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஸ்ணன் ஆகியோருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி யைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். ரஞ்சன், மணவை தம்பி ஆகியோர் இறந்து விட்டனர். ராதாகிருஸ்ணன் சாட்சியாக மாறிவிட்டார். வி.கே.டி. பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார்.

30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதாலும், இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், இந்த வழக்கில் பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதாலும், தனக்கு எதிரான இந்த வழக்கை இரத்துச் செய்ய வேண்டும் என வி.கே.டி பாலன் சென்னை உயர் நீதிமன்றத்தல் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என். பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், சாட்சியாக மாறியவர் உட்பட சில சாட்சிகள் உயிருடன் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை இரத்துச் செய்ய முடியாது என வாதிட்டார்.