ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸ, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் இன்று(20) விடுத்துள்ளது.
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கோத்தபயா ராஜபக்ஸ கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட அனைத்து ஆளுநர்களும் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பசேல ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.