அநுர அரசாங்கத்தில் காணி அபகரிப்பா கொந்தளிக்கும் திருமலை மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

கடந்த கால அரசாங்கங்கள்   தொடக்கம் இற்றை வரை மக்களின்  நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம்  சமூகங்களின் விவசாய , குடியிருப்பு காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. இதனடிப் படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் நில ஆக்கிரமிப்பு தொடர்வதால் மக்கள் கொந்தளிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதன் பின்பும் கூட  நில அபகரிப்புக்கு தீர்வு இல்லாமல் காணப் படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய், முத்து நகர், சம்பூர் உள்ளிட்ட தனியார் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை, தொல் பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம்,இலங்கை துறை முக அதிகார சபை  உள்ளிட்ட பல அரச திணைக்களங்கள் பௌத்த பிக்குகள் போன்றோர் அபிவிருத்தி என்ற போர்வையிலும் புனித பூமி என்ற போர்வையிலும் அடாத்தாக நிலங்களை அபகரித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதி விவசாயிகள் 2025.01.03 அன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கவனயீர்ப்பானது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது.முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பை முத்து நகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் மேற் கொண்டிருந்தனர்

குறித்த கவனயீர்ப்பில் விவசாய காணியை அபகரிக்காதே, வயிற்று பசிக்கு சோலர் பவரா, மாவட்ட தலைவரே உங்கள் கவனத்திற்கு, என பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த முத்து நகர் பகுதியில் ஐந்து சிறு குளங்களை கொண்ட 1600ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1200 விவசாயிகள் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .50 ஏக்கருக்கும் மேற்பட்ட மேட்டு நிலப் பயிர்களுக்கும் இதில் மேற்கொள்ளப்பட்டு சுமார் 5000 குடும்பங்கள் பயனடைகின்றனர். கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத் தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது. தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறை முக அதிகார சபையால் நிறுத்தப்பட்டது .இதே போல் அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விவசாய சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ‘ சோளர் பவர் திட்டத்தை எமது விவசாய பகுதிக்குள் நடை முறைப்படுத்தினால் குளங்கள் மூடப்படலாம். எப்படி அபிவிருத்தி செய்வது. நாட்டுக்கு வருடந்தோரும் பெரும் போகத்தில் 1600 ஏக்கர் X70 புசல் = 112000 நெல்லை உற்பத்தி செய்து தரும் எமது வாழ்வாதார ஜீவனோபாய வயல் நிலங்கள் பறிக்கப்படுமாக இருந்தால் விவசாயிகள் இத் திட்டத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் நாம் உயிரை விடவும் ஆயத்தமாக உள்ளோம்.  எனவே தயவு கூர்ந்து இந்த வயற் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தி நாங்கள் வேளாண்மையைத் தொடர்ந்து செய்கை பண்ண நிலத்தை விடுவித்து தாருங்கள் என  தெரிவித்தார்.

இதன் போது மஹஜர் ஒன்றினை  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் களான ரொசான் அக்மீமன , சண்முகம் குகதாசன் ஆகியோரிடத்தில் கையளித்தனர். இது தவிர சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ள நிலையில் மக்கள் இதனை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒக்லேண்ட் அறிக்கையின் பிரகாரம், திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் தான் அதிகளவான நில அபகரிப்புகள் இடம் பெற்றுள்ளதாக  தெரி விக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது .அண்மையில் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்து வைத்த போதிலும் குறிப்பிட்ட குழுவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த எவரும் நியமிக்கப்படவில்லை என்பதனால் சிறுபான்மை மக்கள் மீது    அரசு பாரபட்சம் காட்டுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறாக தொடர்ச்சியான நில அபகரிப் பால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.   நில மீட்பு போராட்டம் ஒன்று தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக புது வருடப் பிறப்பன்று   (01.01.2025)  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள்   எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது “புதைபொருள் திணைக் களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு தொல்லை தராதே” “தொல்பொருள் அதிகாரிகளே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்காதே”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்கள் எழுப்பப்பட்டது.

மேலும்  குறித்த காணிகளை கையகப் படுத்தும் முகமாக அப்பகுதிகளில் எவ்வித அறிவித்தலும் இன்றி இரவோடு இரவாக பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் பிரதேச சபைக்குச் சொந்தமான 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத் தொகுதிகளுடன் காணப்பட்ட பகுதியும் மற்றுமொரு இடத்தில் நெற் களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டடங்களுடன் கூடிய பகுதியையும் தொல்லியலுக்குரிய இடமாக கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக் கப்படும் எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த சட்ட விரோதமான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல் வாதிகளிடமும் இது தொடர்பான மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

பல முறை நில மீட்பு போராட்டங்களை நடாத்தி கலைத்து போயுள்ளனர். திரியாய் பகுதியிலும் விவசாய காணிகளை அப்பகுதி விகாராதிபதி ஒருவரான அரிசி மலை பௌத்த பிக்கு அடாவடியாக தனியார் காணிகளுக்குள் அத்து மீறி நிலத்தை உழுது நெற் செய்கைக்காக தயார் படுத்தியதனால் மக்கள் போராட்டம்  நடத்தவேண்டியதாயிற்று.  இது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்த போதும் எது வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப் பகுதி விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

தொடர் நில அபகரிப்பால்  தமிழ் முஸ்லீம் மக்களே பாதிக்கப்படுகின்றனர். நெற் செய்கையை வாழ்வாதாரமாக நம்பி வாழும் விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சியை பொறுப்பேற்றா லும் நில அபகரிப்புக்கள் சொடர்ந்து கொண்டே உள்ளது .

எனவே நில ஆக்கிரமிப்பை தடுக்க புதிய அரசாங்கம் புதியதொரு பொறி முறைகளை உருவாக்க வேண்டும் என்பதே மக்களது எதிர் பார்ப்பாகும்.