அநுராவின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சினை  ‘syllabus’  இல்லை – பா.அரியநேத்திரன்

1948, பெப்ரவரி,04ல் பிரித்தானியரிடம் இரு ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டாலும் உண்மையில் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவருக்கு ஆட்சி கைமாறிய தினமே அதுவாகும். இலங்கையில் வாழும் தமிழ் இனத்துக்கு சுதந்திரம் இதுவரை இல்லை. தமிழர் களுக்கு 77, வருட கரி நாளாகவே பார்க்கப் படுகிறது.
கடந்த 2025, பெப்ரவரி,04ல் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுராவால் எளிமை யான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது, அதில் தமிழ் மொழி மூலமாக தேசிய கீதம் பாடப்பட்டது என்றெல்லாம் பல சமூக வலைத்தளங்களில் பலதமிழர் கள் புகழாரம் சூட்டுகிறார்கள். தமிழில் தேசிய கீதம் பாடுவதாலோ, வல்வெட்டித்துறையில் சென்று ஜனாதிபதி வகுப்பு எடுத்ததாலோ, அல்லது அவருக்கு யாழில்  ஆராத்தி எடுத்து ஆரவாரம் காட்டுவதாலோ ஈழத்தமிழ் இனத்துக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கருதமுடியாது.
1978ல், புதிய அரசியலமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகமாகி தற்போது 2025ம் ஆண்டு வரை 47, வருடங்களில் 8, ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்து தற்போது 4, மாதங்களாக 9வது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசநாயக்கா பதவி ஏற்றுள்ளார். இடது சாரி கொள்கை என கூறப்பட்டாலும் அவர்கள் வலது இடது சாரி கொண்ட கலப்பு கொள்கையே அவர்களிடம் தற்போது உள்ளது.
பச்சைகட்சி, நீலக்கட்சி ஆட்சிகள் மாறி தற்போது சிவப்புக்கட்சிக்கு கைமாறியுள்ளது. நிறங்கள் மாறியுள்ளது நிலைமை மாறவில்லை. முகங்கள் மாறியுள்ளது முறைமை மாறவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புதிய அரசிய லமைப்பை உருவாக்குவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிபதி முறைமை ஆட்சியை நீக்குவதாகவும் தற்போதய ஜனாதிபதி அநுர கூறினார். அவருடைய கட்சி தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் நிகால் அபேசிங்கா வாக இருக்கலாம், அந்த கட்சியின் தாய்க்கட்சி யான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவாக இருக்கலாம் அனைவருமே கூறியிருந்தார்கள்.
பதவி பெற்று நான்கு மாதம் கடந்து அதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்பட வில்லை. தற்போது 3, வருடங்களால் நிச்சயம் அதை செய்வேன் என கூறுகிறார் ஒருவேளை எதிர்வரும் 2028ம் ஆண்டு பழைய அரசியல் யாப்பு 1978ல் நிறைவேற்றியது 50, வருடம் நிறைவுறும் நிலையில் 50,ஆண்டு பூர்த்தி விழாவாக தற்போதய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் 2028ம் ஆண்டை குறித்து வைத்துள்ளார்களோ தெரியாது. என்னைப்பொறுத்தவரை புதிய அரசியல் யாப்பு திருத்தம் என்பது இந்த அரசாலும் நிறைவேற்ற முடியாமல் போனாலும் ஆச்சரியம் இல்லை. இப்போது புதுக்குண்டை தூக்கிப்போட்டுள்ளார் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயசிங்க.
அரசியலமைப்பை விட பொருளாதாரப் பிரச்சனையே முக்கியமானது இப்போதைக்கு அரசியலமைப்பு முக்கியமில்லை எனக்கூறி அரசியலமைப்பு விடயத்தை மீண்டும் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.
இந்த பேச்சைப்பார்த்தால் ஏற்கனவே பதவியில் இருந்த எட்டு ஜனாதிபதிகளைப் போன்றே அநுரவும் தமது நிறைவேற்று அதி காரத்தை வைத்து ஆட்சியை கடத்தப்போவது உறுதி. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறைமையை மாற்றுவதையோ புதிய அரசிய லைப்பை உருவாக்குவதோ தற்போதய ஜனாதிபதி அநுராவுக்கோ அவருடைய தேசிய மக்கள்சக்தி அரசுக்கோ அறவே இல்லை, பொருளாதாரம், ஊழல், அபிவிருத்தி, ஒன்றுபட்ட இலங்கையர், சமத்துவம் இந்த ஐந்து சொற்களையும் வைத்து ஐந்துவருடங்கள் கடத்தக்கூடியதாகவே தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதியும் 159, பாராளு மன்ற உறுப்பினர்களும் நாட்களை கடத்துவார்கள் என்பதை அவர்களுடைய செயல்பாடுகளில் தெளிவாக தெரிகிறது. 159, மக்கள் பிரதிநிதிகளில் ஏறக்குறைய 15, உறுப்பினர்களை தவிர்ந்த 144, உறுப்பினர்களும் புது முகங்களாகவே ஒரு பயிற்சி பாடசாலை போன்றே பாராளுமன்றத்தில் உள்ளனர்.அவர்கள் தேசியமக்கள்சக்தி, மக்கள் விடுதலை முன்னணி செயலாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் சொல்வதை நாடாளுமன்றத்தில் செய்வார்கள் அவர்களை மீறி வேறு எதையும் செய்யமாட்டார்கள்.
ஜனாதிபதியாகி முதலாவது ஆற்றிய அக்கிராசன உரையானாலும்சரி, கடந்த 77வது சுதந்திரதின உரையானாலும் சரி அவர் எந்த ஒரு இடத்திலும் இனப்பிரச்சனை ஒன்று இருந்தது, இருக்கிறது, அதற்கான போராட்டம் இடம்பெற்றது, அதற்காக அரசியல் தீர்வு வழங்குவது முக்கியம் என்று எந்த ஒரு சந்தர்பத்தி
லும் அவர் கூறவில்லை கடந்த வரு டம் 2024, டிசம்பர், 15ல் இந்தியாவுக்கும்,  இந்த வருடம் 2025, ஜனவரி, 13ல் சீனாவுக்கும் சென்ற ஜனாதி பதி அரசியல் தீர்வு விடயம்பற்றி பேச வில்லை. மூன்றாவது வெளிநாட்டு பயண மாக எதிர்வரும் 2025, பெப்ர வரி, 10, தொடக் கம் பெப்ரவரி, 15, வரையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ளது. இந்தப் பயணத்தின் போது,துபாயில் நடைபெறும் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றுவார். என கூறப்படுகிறது. இந்த பயணங்கள் எல்லாமே பொருளாதாரம் தொடர்
பாகவே உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படு வதை காணலாம்.
சுதந்திரதின உரையிலும் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே கூறியுள்ளார் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்று தேசிய தலைவர் பிரபாகரனுடைய பிறந்த   மண் வல் வெட்டித்துறை சென்று அங்குள்ள மக்களுக்கு வகுப்பு எடுத்தார் அவருடைய அந்த பாடத்தில் இனப்பிரச்சனை தொடர்பாகவோ, அரசியல் தீர்வு தொடர்பாகவோ பேசவில்லை. அவரின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சினை பாடம் இல்லை பொருளாதாரமும், ஊழல் ஒழிப்பும் மட்டுமே உள்ளது இன்னும் சொல்வ தானால் “அநுரவின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சனை சிலவஷ் (syllabus) இல்லை” என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
இந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய் பயணங்களை முடித்த கையோடு இந்த மாதம் இறுதி வாரத்தில் மட்டக்களப்பிற்கும் வருகை தருவார் என நம்பப்படுகிறது அங்கும் ஏதாவது ஒரு கிராமத்திற்குச்சென்று இதே சிலவஷ் பொருளாதாரப்பாடம் நடத்துவார், தமிழ் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசின் மூளைச்சலவை பேச்சுகளுக்கு செவிசாய்த்து தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து விலகிச்செல்வதை தடுப்பதற்காக வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய தலைமை களுடமோ, கட்சிகளுக்கோ மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் எதுவுமே கடந்த 16, வருடங் களாக இல்லை என்பதே உண்மை.
இம்முறையும் வடக்கு கிழக்கில் இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் கரிநாள் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றாலும் மாறாக என்றுமில்லாத வகையில் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களும் வடகிழக்கில் பல தமிழ் பகுதிகளில் பகிரங்கமாகவே சிங்க கொடி தூக்கி கொண்டாட்டங்களாக நடைபெற்றதை அவதா னிக்க முடிந்தது. தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடுவதாலோ, தாய் மொழியில் அரச நிர்வாக சேவைகள் இடம்பெறுவதாலோ, தமிழ் பகுதிகளில் தமிழ் பொலிசாரை நியமனம் செய்வதாலோ தமிழ் இனத்திற்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக இல்லை. ஆனால் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து தமிழ் இளைஞர்களின் மனோநிலை மாற்ற முடியும் என்ற சிந்தனை தற்போதைய அரசுக்கு உள்ளது என்பது உண்மை..