ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை கடுமையாக எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அடிலக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரின் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் காலையில் தேநீர் அருந்தியதாகவும், அதிலேயே விஷம் கலந்திருக்கக் கூடும் எனவும் அவரின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகின்றார். அத்துடன் இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட விடயம் எனவும் அவர் வானொலி நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நவல்னி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவராக இருந்தார். நவல்னி முன்னர் பலமுறை தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
2017ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தியவர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே அவரது முகத்தில் கிருமிநாசினியாகப் பயன்படுத்தும் பச்சை சாயத்தை வீசிய போது, அவர் கண்ணில் இரசாயன தீக்காயங்கள் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக பொலிசாரால் தாக்கப்பட்டு பொலிஸ் தடுப்பு மையத்தில் இருந்தார்.
நவல்னியின் வழக்கறிஞர்கள் ஒரு பொது நபரை படுகொலை செய்ய முயன்றது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.