வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாதம் தலைதூக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
16 ஆவது இராணுவ தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு, இதனை தெரிவித்த அவர் இந்த இனவாதம், பலத்தை கைப்பற்றும் நோக்கில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றிணைந்துள்ள இந்த தருணத்தில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன, மதம் என்ற பேதமின்றி நாட்டுக்காக போரிட்டவர்களை தினமும் நாம் நினைவுகூர வேண்டும். நாடு அவர்களுக்கு கடன்பட்டுள்ளது.யுத்தம் என்பது பாரிய அழிவுகளையும், இழப்புகளையும் மட்டுமே ஏற்படுத்த கூடியது என்பதை அனைவரும் அறிவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் போரிட்ட படையினரின் நோக்கம் யுத்தம் வேண்டும் என்பதல்ல மாறாக சமாதானத்தை எதிர்பார்த்தே. வடக்கு கிழக்கு என்ற பேதமின்றி இந்த போரினால் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
எந்தவொரு பெற்றோருக்கும், தமது பிள்ளைகள் பெறுமதியானர்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுத்து, அமைதியானதொரு நாட்டை எதிர்கால சந்ததிக்கு கையளிப்பதே தற்போதுள்ள எம் அனைவரினது பொறுப்பாகும்.எனவே, சந்தேகம், கோபம், வெறுப்பு என்பவற்றை களைந்து, சகோதரத்துவம், கருணை, பாசம் மிக்க நாட்டினை அனைவரும் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.