அச்சுறுத்தும் நிவர் புயல் – இது வரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்?

நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியிருப்பதாவது:

“ நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

மேலும் புயல் காரணமாக வரும் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்யும்.” என்றார்.

இந்நிலையில், நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், நிலைமையை தீவிரமாக கண்காணிக்க, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திர அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன.

2008ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நிஷா புயலாக உருவெடுத்தது. 20 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1.5 லட்சம் வீடுகளும் சேதமடைந்தன. 170-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2010ம் ஆண்டு தென்சீனக்கடலில் உருவான ஜல்புயல்,   நவம்பர் 6-ம் திகதி சென்னையை தாக்கியது.  50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2011-ம் ஆண்டு வங்ககடலில் உருவான தானே  புயல், பல்லாயிரக்கணக்கான மரங்களையும், பயிர்களை நாசப்படுத்தியது. 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2012-ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் நீலம் புயல் உருவானது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. பல ஊர்களில் கடல்நீர் புகுந்ததால், ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

2016 டிசம்பரில் உருவான வர்தா புயலால் சென்னையில் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

2017ல் இலங்கை அருகே வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ஒக்கி புயல், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தை புரட்டி போட்டது.  இந்த ஒக்கி புயலுக்கு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2018ம் ஆண்டு எண்ணற்ற இயற்கை வளங்களை அழித்த கஜா புயல், 60-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டது. கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த டெல்டா மக்கள் இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்க நிலையில், நடப்பாண்டு இறுதியில் நிவர் புயல் உருவாகி தமிழகம் எங்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.