Tamil News
Home உலகச் செய்திகள் அகதிகள் போராட்டத்தில் போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி 

அகதிகள் போராட்டத்தில் போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு  வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னதாக கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களாவர்.

இந்த சூழலில், அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த பொழுது ஒரே அடியில் வீழ்த்தும் விதமாக வயது முதிர்ந்த போராட்டக்காரர் ஒருவரை ஆஸ்திரேலிய காவல் அதிகாரி தாக்கியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது. இந்த காட்சி தொடர்பாக தாங்கள் அறிந்திருப்பதாகவும் அதனை ஆராய்ந்து வருவதாகவும் குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பின் பேச்சாளர் டேனி டி லியோன், இப்போராட்டத்தில் சுமார் 200 பேர் பங்கேற்றிருந்தனர் எனக் கூறுகிறார்.

காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்ட நபர் இதற்கு முன்பு போராட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், தாக்கப்பட்ட பிறகு அவரது காதிலிருந்து ரத்தம் வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்ட பப்பு நியூ கினியா, நவுருத்தீவு ஆகிய தீவு நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட அகதிகளே பிரிஸ்பேனில் உள்ள கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version