நவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு ஆயுள்தடையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், நியூசிலாந்தின் கோரிக்கைக்கிணங்க குறிப்பிட்ட அகதிகளை அந்நாட்டில் குடியமர்த்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொறிஸன் அரசாங்கத்தின் இந்த திட்டம் அடுத்தவருடமளவில் நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து பப்புவா நியூகினி மற்றும் நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டு, தற்போது அந்த தீவுகளிலேயே வசிப்பதற்கு ஏதுவாக விடுவிக்கப்பட்டுள்ள அகதிகளில் ஒரு தொகுதியினரை தமது நாட்டில் குடியமர்த்துவதற்கு தயார் என்று நியூசிலாந்து அரசு தொடர்ந்து அறிவித்துவருகிறது.
ஆனால், குறிப்பிட்ட அகதிகள் நியூசிலாந்துக்கு சென்றால், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடும் என்ற காரணத்தினால், நியூசிலாந்தின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் லிபரல் அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
இந்த பின்னணியில், நியூசிலாந்துக்கு குறிப்பிட்ட அகதிகள் சென்றாலும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியாதபடி ஆயுள்தடையை கொண்டுவந்தபின், அவர்களை அந்த நாட்டுக்கு அனுப்புகின்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தற்போது மொறிஸன் அரசு சிந்தித்துவருவதாக “The Age” தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் முன்னர் Malcolm Turnbull காலத்தில் பரீசலிக்கப்பட்டபோதும், அதனைச் சட்டமாக நிறைவேற்றுவது தொடர்பில் லேபர் கட்சியின் ஆதரவு கிட்டவில்லை.
ஆனால், தற்போது கடல்கடந்துள்ள குறிப்பிட்ட அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு தடைபோடுகின்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றியதை அடுத்து, மொறிஸன் அரசு அந்த அகதிகளுக்கு ஆயுள்தடை விதித்து நியூசிலாந்துக்கு அனுப்புவது குறித்து தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
லேபர் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே வெளியிலிருந்து ஆதரவளிக்கும் செனட்டர்களுடன் பேரம் பேசி இந்தச் சட்டத்தை அடுத்த வருடம் நிறைவேற்றுவதற்கு மொறிஸன் அரசு திட்டமிட்டுவருவதாக “The Age” மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் கடல்கடந்து வாழும் அகதிகள் மீது ஆயுள்தடை விதிப்பது குறித்த சட்டமுன்வடிவை உடனடியாக நாடாளுமன்றுக்கு கொண்டுவரும் எண்ணம் இல்லை என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
நன்றி- SSB தமிழ்