அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது.

இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், புலம்பெயர்வு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு மூலம் கீழ் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பறிக்க இயலாது என்றும் அது வழக்கு விவாதிக்கும் குறிப்பிட்ட பிரச்னைகளை சார்ந்தது என்றும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசு முன்வைத்த வாதத்தை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அர்த்தமற்றதாகியுள்ளது என தஞ்சக்கோரிக்கையாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதே சமயம், புலம்பெயர்வு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவை அரசுத் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தில் முன்வைக்கலாம் என இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில, இது அரசு தரப்புக்கு சாதமான தீர்ப்பாகவும் கருதப்படுகின்றது.

இது அரசுக்கு சாதமான தீர்ப்பாகவும கருதப்படுவதால், வரும் காலங்களில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக தஞ்சக்கோரிக்கையாளர்கள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையில் சிரமம் ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் கடந்த காலங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர், தற்போதும் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.