அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- ஐ.நா வலியுறுத்தல்

புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இணைய வழியில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறு ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஐ.நா.சபைக் கூட்டத்தில், உரையாற்றியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகை முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவைப் பொறுப்பாளியாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசியல் வைரசினை பரப்புகின்றார் என  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும் “கோவிட் 19 தொடர்பான விஸ்தரிக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜி ஜின்பிங், சீனாவுக்கு எந்த நாட்டுடனும் பனிப்போரிலோ அல்லது சூடான யுத்தத்திலோ ஈடுபடுவதற்கான நோக்கமில்லை. சீனாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.  சர்வதேச சமூகம் கோவிட் 19க்கு எதிராக கடுமையான போராட்டத்தை மேற்கொண்டுள்ள வேளையில், டொனால்ட் டிரம்ப் ஐநா பொதுச்சபையில் அரசியல் வைரசினை பரப்புகின்றார். உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளைக் கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது”. என அமெரிக்காவை ஜி ஜின்பிங் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐ.நா, புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.