Home செய்திகள் திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த இரண்டாவது தினம் இன்றாகும்.

இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 அன்று திலீபன், இராசையா தம்பதிகளுக்குப் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தவர். 1987ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை தமிழர் தாயகத்தில் அமைதிப்படையாக காலடி வைத்தது இந்திய ராணுவம்.

ஒப்பற்ற தியாகத்தை உலகறியச் செய்த ஈழத் தமிழர்களின் உன்னத புதல்வனுக்கு நினைவு தினம்! | Athavan News

ஈழ தமிழரின் பிரச்னையை தீர்க்க என்று கூறி இந்திய- இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போதும், அது தமிழர்களுடைய தேசிய பிரச்னையை தீர்ப்பதற்கும், தமிழர் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையிலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க வழிகோலவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு தமிழர் தரப்பு அலோசனைகளையும் இந்திய இலங்கை அரசுகள் பெறவில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்பும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு எதிராக பெரும் மனித உரிமை மீறல்களையும் அடக்கு முறைகளையும், தமிழர் தாயகமாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களையும் மிக வேகமாக தொடர்ந்தார்.

இந்த நிலையில் தான், சிங்கள அரசிடம் தமிழ் இனப்பிரச்னைக்கு நீதி கேட்பதில் பயன் இல்லை என முடிவெடுத்த திலீபன், இந்திய அரசு தான், தமிழினப்பிரச்னையில் தலையிட்டது, மக்களின் உரிமை பிரச்னைக்கு உத்தரவாதம் அளித்தது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்தது. ஆகவே இந்திய அரசிடமே தமிழ் மக்களின் உரிமையைக்கோரி போராடுவதன் மூலம் அதன் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

மஹாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு, ஆயுதப்போராளியான திலீபன், அகிம்சை வழியில் செப்டம்பர் 15, 1987.அன்று ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நீர் கூட அருந்தாமல் உண்ணா விரதப் போரை ஆரம்பித்தார்.

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும், ராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3. அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே திலீபனின் கோரிக்கைகள் ஆகும்.

இந்த ஐந்து கோரிக்கைகளும் புதிதானவை அல்ல. ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விஷயங்கள்தான்.

அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக இருகின்றன.

அதேபோல, உண்ணாவிரத மேடை ஏறுவதற்கு முன்பு தன்னுடைய நண்பர்களிடம்,

1 கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்

3 எனக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யக்கூடாது.

4 நான் உணர்வு இழந்த பிறகும் என் வாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றக்கூடாது

5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது என இந்த 5 உறுதிமொழிகளையும் வாங்கிக்கொண்டுதான் மேடை ஏறினார். அதே நேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் திலீபனின் கோரிக்கைகளை முன் வைத்து அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திலீபன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத மேடையில் ஏறி சிரித்த முகத்துடன் அமரும் போது எவரும் அவர் உயிர் தம் கண் முன்பாகவே பிரியும் என்று எதிர்பார்க்கவில்லை.

அகிம்சைப் போராட்டங்களை, இந்தியா மதிக்கும்… இந்தியாவின் அடிப்படைத்தத்துவம், ஆன்மீகத் தத்துவம், உயர்வான தத்துவம் அனைத்துமே அகிம்சைக் கோட்பாடுதான் என தமிழர்கள் நம்பினர். மேலும், 1986ம் ஆண்டு இந்திய அரசால் தொலைத் தொடர்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, அதை திரும்பத் தர வலியுறுத்தி, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டப் போராட்டம் வெற்றி பெற்றதும் அகிம்சைக்கு இந்தியா தலைவணங்கும் என மக்கள் நம்பியதற்கு மற்றொரு காரணம்.

ஆனால் திலீபன் தன் உறுதியான போராட்டம் தமிழர் வாழ்வில் மக்கள் புரட்சியூடான ஓர் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பினார்.

நாட்கள் நகர்ந்தன…ஆனால் இந்திய அரசு தரப்பில் திலீபனின் கோரிக்கைகள் தொடர்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. நாவறண்டு தொண்டைக்குழிக்குள் சொற்கள் புதைந்து போக… உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டு 4ம் நாள் உரையாற்றுகின்றார்… திலீபன்.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையுமுன்னர் பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கின்றேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்!

மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது உடல் உறுப்புக்கள் செயலிழப்பதனால் இனிமேல் என்னால் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் என்னைத் தொடர்ந்து வருவார்கள் அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார்.

நாட்கள் கடக்க கடக்க இந்திய அரசின் மீதான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. இந்திய அரசு மவுனமாக நாட்களை நகர்த்தியது.இருந்தும் திலீபன் தன் உடலை திரியாக்கி உயிரை நெய்யாக்கி லட்சிய வேள்வியில் உருகிக்கொண்டிருந்தார். திலீபன் இருந்த மேடைக்கு அருகிலேயே இன்னொரு மேடை அமைத்து உண்ணா விரதத்துக்கு ஆதரவாரக பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில்,

“திலீபன் அழைப்பது சாவையா – இந்தச் சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா – அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா” என்று அன்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

தினம் செத்துக்கொண்டிருக்கும் திலீபனின் நிலை கண்டு…,

‘விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் – போய் முடியப் போகின்றான்… போய் முடியப் போகின்றான்.. என்று கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கதறி நின்றார்.

தான் இறக்கப்போவது உறுதி என்று அறிந்திருந்தும், தனது கொள்ளையில் மிகவும் உறுதியுடன் பயணித்தார் திலீபன். ஆனால் காந்திய தேசம் திலீபனின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுக்கும் செவி சாய்காகாது போக … அவர் தனது போராட்டத்தின் 12ஆவது நாள் சாவைத் தழுவினார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தொடர்பில், “திலீபனின் மரணம் பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி, ஒருவன் தான் நேசித்த மண்ணுக்காக எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்ய முடியுமோ அந்த அற்புதமான அற்பணிப்பைத்தான் அவன் செய்தான்” என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்தது. சாத்வீக ரீதியான திலீபனின் சாவை கண்டும் இலங்கை அரசு திருந்தவில்லை, இந்திய அரசும் ஈழத்தமிழர் பிரச்னையின் உண்மை நிலையை இன்று வரையில் உணரவில்லை.

Exit mobile version