உடல் வலுவிழந்து சென்றாலும் உள வலுவிழக்காது உறுதியாய் உரையாற்றிய திலீபன்!

தியாக தீபம் திலீபனின் சாகும் வரையான உண்ணா விரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவில், அவர் தோழன் ராஜனின் பதிவு…

தீலிபன் மூன்றாவது நாள் உடல் பலம் இழந்து இரவு இரவாக முனகியதும் கால்கள் கைகள் குறண்டியதும் இரு நவீனன்களும் நானும் அன்றிரவு எம்மோடு நின்ற முரளி வாஞ்சி அண்ணா, அஜந்தன் மாறன், துஷ்யந்தன் போன்ற போராளிகள் தலையை வாரி அழுத்தி விடுவதும், கால்களை பிடித்து உருவி விடுவதுமாக இருந்தோம்.

காலையில் மக்கள் கண்ணீருடன் மேடையின் முன்னால் இருந்து, இந்திய அதிகாரிகள் வந்து தீலிபனை காப்பாற்ற மாட்டார்களா? என்று கூட்டமாகவும், தனித்தனியாகவும் மேடையில் சுற்றி நிற்கும் போராளிகளிடம் கலந்துரையாடத் தொடங்கினார்கள்.

அவர்கள் கண்ணீரைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வரும். நாங்கள் போராளிகள் அழுதால் வெட்கம் என்ற உணர்வோடு அழுகையை அடக்குவோம் .

இந்த வேளையில் தீலிபனின் அண்ணன் இளங்கோவும் அங்கிருந்தார். அவரும் அமைப்பில் இணைந்து எங்கள் தொழில் நுட்பப்பிரிவில் கடமையாற்றியதையும் அவர் தன் தம்பியைப் பார்த்து அவ்வப்போது கதைத்தையும் அவர்கள் நண்பர்களாக பேசித் சிரித்ததையும் பார்த்த நாம், இன்று ஒரு மௌன போராட்டத்தையும் சகோதர சோகத்தையும் காண வேண்டியிருந்தது.

அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கும்போது இன்று கண்ணீரும் கவலையுமாகத்தான் உள்ளது. 1987 இல் கண்ட இளங்கோ அண்ணையை இன்று வரை தேடுகிறேன் சந்திக்க முடியவில்லை.

அப்பா, அண்ணன், குடும்ப உறவினர்கள், ஊர் நண்பர்கள் ஏன் உலக மக்கள் எல்லோரும் அவர் உரிமைக்காக உயிர் உருக்கி நடாத்திய போராட்டத்தைக் கண்டு கலங்கி நின்ற வேளை, அவரது ஊரவர் ஒருவர் தீலிபனின் இரண்டாவது அண்ணனிற்கு திருமணம் நடந்த வேளையில் மாப்பிள்ளைத் தோழனாக யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த காலத்தில் கலந்து கொண்டு குடும்ப நிகழ்வை நடாத்திய மேடைக்கு பின், இந்த மேடையில் இப்படி பார்க்கிறேனே என்று கூறி என்னிடம் கதறி அழுதது இன்றும் நினைக்கும் போது கண்களை கலங்கவைக்கிறது.

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் எங்கள் செயலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய தொடர்பாடல் அதிகாரி பெரியசாமியுடன் நட்புடன் பகிரும் தகவல்களையும், மாத்தையா அண்ணா, யோகி அண்ணாவிடம் கேட்டு பெறும் தகவல்களையும் வைத்து மக்களை தேற்றும் காலமாகவும் அன்றைய தினம் அமைந்தது.

நாளாம் நாள் பகல் தீலிபன் மனவலிமை ஓங்கி தன் உறுதியையும் உணர்வையும் வெளிப்படுத்திய உரை ஒன்றை வழங்கியது எங்கள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வை தந்தது. தீலிபனின் உரை இன்றும் எல்லோர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனாலும் அவர் கண்ட கனவை நிறை வேற்ற முடியாது தமிழர்கள் தங்களுக்காக உறுதியுடன் போராடிய தலைமையையும், அமைப்பையும் காலத்திடம் பறி கொடுத்து பரிதவித்து நிற்கின்றனர்.

எனினும் அந்தக் கனவு இன்றும் நீறுபூத்த நெருப்பாக எம்மக்கள் மனதில் இருப்பதுடன் எம்மவர் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனாகவும் உலகத் தமிழரின் அகிம்சை தலைவனாகவும் தீலிபனை ஏற்று இன்று உலகத்தமிழினம் தொடர்ந்தும் போராடுவது தீலிபனின் கனவு நிறை வேறும் என்பதை பறை சாற்றுவதாகவே நான் உணர்கிறேன்.

தொடரும்…