திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?

121
174 Views

திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்து சென்றிருந்த அந்தக் கட்சிகள் தற்போது ஓர் அணியில் இருந்து திலீபனை நினைவு கூர்ந்துள்ளார்கள்.

திலீபனை நினைவு கூர்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் மாவை. சேனாதிராஜா என்பதே கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த மாவை. சேனாதிராஜா தன்னுடைய எதிர்கால அரசியலை கட்டி அமைப்பதற்கு இதனை பயன்படுத்திக் கொள்வார் என்பது உண்மைதான். மாகாண சபைகளுக்கான தேர்தலும் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலைமையில், மக்கள் மத்தியில் வீழ்ச்சியடைந்திருக்கும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை மாவைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பொதுத் தேர்தலின்போது தமிழ் கட்சிகள் அனைத்தும் பிளவுபட்டு தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளை சிதறடித்த பின்னணியில், தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் தேசியம் பேசும் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை பலரும் வலியுறுத்தி இருந்தார்கள்.

அரசின் திட்டம் என்ன?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு ஆரம்பம் என்று தான் கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து வரப்போகும் மாவீரர் நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் தடை போடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதற்கான ஒரு ஆரம்ப கட்ட செயற்பாடாகவே இது உள்ளது. மாவீரர்களை நினைவு கூருவதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பது கோத்தாபய ராஜபக்ஷ அரசின் கருத்து. அதனால்தான் இவர்கள் இவ்விடயத்தில் உறுதியாக நின்றார்கள்.

நீதிமன்றங்கள் மூலமாக தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கூட குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பொலிஸ் நிலையங்களே இந்தத் தடைகளை ஏற்படுத்துவதற்கான மனுக்களை தாக்கல் செய்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது. அதாவது இது வெறுமனே நீதிமன்றச் செயற்பாடு அல்ல. அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டதாகவே காவல்துறையினர் செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம் அவ்வாறு செய்யப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரத்திலிருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுவது தான் நீதிமன்றங்களின் செயற்பாடாக இலங்கையில் இருக்கின்றது.

ஒற்றுமை முயற்சி

தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னெடுக்கப்பட்டு தோல்வி அடைந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் போது அனைத்து தமிழ் கட்சிகளும் அதில் பங்கு கொண்டிருந்தனர் என்பதும், பின்னர் அந்த முயற்சியில் இருந்து அவர்கள் வெளியேறி தனித்தனியான நிலைப்பாடுகள் எடுத்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஏனைய சில கட்சிகள் மௌனமாக இருந்தன.

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியக் கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை அதிகரிக்க முடியும் என்ற இலக்குடன் செயற்பட்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம், அது தோல்வியடைந்த பின்னர் தமது முயற்சிகளை நிறுத்திக் கொண்டது. இந்த தமிழ் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்துகொண்ட நிலைமையிலேயே தனது முயற்சியை அவர்கள் கைவிட்டார்கள்.

ஆனால் இப்போது மாவை சேனாதிராஜா, பொதுத் தேர்தல் தோல்வியின் பின்னர் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் இன்னொரு விடயமும் கவனிக்கத்தக்கது. கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் இந்த முயற்சிகளில் இருந்து முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.

தோல்வியின் பின் எழுச்சி

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டு தமிழ்த் தலைவர்களாகக் கருதப்பட்ட அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் படுதோல்வி அடைந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் அப்போது தமிழரசு கட்சியிலும், சிவசிதம்பரம் தமிழ் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். 70களுக்குப் பின்னர் ஏற்பட்ட தீவிர தமிழ் தேசியவாத போக்கும் அவர்கள் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. தமது செல்வாக்கை இளைஞர்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தீவிரமான போக்கில் செயல்பட வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதேபோன்ற ஒரு நிலைமையில் தான் இப்போது மாவை. சேனாதிராஜா இருக்கின்றார்.

தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஐக்கியம் என்பதைவிட தங்களுடைய தனித்துவத்தைப் பேணிக் கொள்வதும், அதன் மூலமாக மக்கள் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதும் தான் அவருடைய இலக்காக இருக்கிறது. அதனால் தான் கடந்த காலங்களில் ஒற்றுமை முயற்சிகள் தோல்வியடைந்தன.

புலிகள் ஏற்படுத்திய ஒற்றுமை

2000ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மிகவும் பலமான ஒரு நிலைமையில் இருந்தனர். இருந்தபோதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முடிந்தது. சிதறிப்போய் பல்வேறு கோணங்களில் செயற்பட்ட கட்சிகளை இணைத்து ஒரு பலமான அரசியல் அமைப்பாக அதனை அவர்களால் உருவாக்க முடிந்தது.  2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் 22 ஆசனங்களில் பெறக்கூடியதாக இருந்தமைக்கும் அதுதான் காரணம். எதிர்வரும் காலங்களில் அவ்வாறு பாரிய வெற்றி ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையில் எந்த ஒரு தமிழ் கட்சியும் இல்லை. அவற்றை ஐக்கியப்படுத்தக் கூடிய நிலைமையில் விடுதலைப்புலிகள் போன்ற பலமான அமைப்பும் இல்லை.

இந்தப் பின்னணியில் திலீபனை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கட்சிகளிடையே இணக்கப்பாடு இப்போது ஏற்பட்டிருக்கின்றது என்ற போதிலும் கூட இது எந்தளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறிதான். இந்த ஐக்கியம் திலீபனுடைய நினைவேந்தலுடன் முடிவடைந்து விடுமா அல்லது பொதுவான விடயங்களிலும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது.

தேர்தல் அரசியல் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு பெருமளவு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை. அரசியல் கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு, இராணுவ பிரசன்னத்தை குறைப்பது, போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது போன்ற பல்வேறு நெருக்கடிகள் தமிழ் மக்கள் முன்பாக தீர்க்கப்படாதவையாக இன்னும் உள்ளது. இதனைவிட அரசியல் தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது.

இந்தப் பின்னணியில் திலீபனை முன்னிறுத்தி ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் பொதுவான கோரிக்கைகளை வென்றெடுப்பதில், பொதுவான வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்பட வேண்டும் வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களுடைய விருப்பம். இந்தளவு பிரச்சினைகள் தமிழ் மக்கள் முன்பாக இருக்கும் நிலையில் தமது தனித்துவத்தைப் பாதுகாப்பது என்ற நிலையில், மக்களின் நலன்களை மறந்து செயற்படக்கூடாது என்பதை தேசியத்தை முன்னிறுத்திச் செயற்படும் தமிழ்க் கட்சிகள் உணரவேண்டும்.

-அகிலன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here