தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரத்ன தேரர்’

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரத்ன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிப்பதாகவும் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாதென்றும்  தெரிவித்துள்ளார்.

சுமணரத்ன தேரருக்கு அவரின் மொழியில் அதாவது சிங்கள மொழியில்தான் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை சிறீலங்காவில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக இத்தனை காலம், அரச நிறுவனங்களில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. அநேகமாக சிங்கள மொழியிலேயேதான் அந்த அறிவித்தல்கள் இருக்கும்.

மேலும் ஆம்பிடியே சுமணரத்ன தேரருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். நிச்சயம் அதற்கான கடிதங்கள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்திருந்தால் அவர் அப்போதே பொங்கி எழுந்திருப்பார். இப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் கீழ் பல சிங்களவர்கள் கடுமையாக கொதித்தெழுந்துள்ளனர். சிங்கள பௌத்த நாடு இது என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா என்று ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள்.