தேசிய சிந்தனையின் கருத்துருவாக்கமே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டுள்ளது-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

296
3 Views

இந்த வாரம் சிறீலங்காவில் நடந்து முடிந்த 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தெற்கிலும், வட கிழக்கிலும் ஏற்கனேவே காணப்பட்ட முனைவாக்கத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவே கருதத் தோன்றுகின்றது.

தெற்கில் ராஜபக்சாக்களின் வெற்றி என்பது அங்கு அவர்களின் அரசியல் வெற்றி அல்ல; மாறாக மதம், இனம் மற்றும் கலாச்சார மரபுகளின் கருத்தை மக்கள் மத்தியில் விதைத்ததால் ஏற்பட்ட கருத்தியல் மாற்றம்.

அரச தலைவர் தேர்தலின் தோல்வியின் பின்னர் தென்னிலங்கை முழுவதும் உள்ள பௌத்த ஆலயங்களுக்கு சென்றார் மகிந்த, அதேசமயம், தனது வெற்றியின் பின்னர் ராவன்வாலி மகா சேயாவில் பதவியேற்றார் கோத்தா, களனி ரஜமகா விகாரையில் பதவியேற்கின்றார் மகிந்தா. மாதம் தோறும் பௌத்த மதத்தலைவர்களை சந்திக்கின்றார் சிறீலங்கா அரச தலைவர். சிங்கள பௌத்த தொல்பொருட்களை தேடுவதற்கு கிழக்கில் குழு அமைத்தவரும் அவரே.

அதாவது இந்த புதிய இனவாத அணுகுமுறை மூலம் 70 விகித சிங்கள மக்களை தன்பக்கம் திருப்பியுள்ளனர் மகிந்த குடும்பத்தினர். இந்த அரசியலுக்கு வறுமையை விடவும் சக்தி அதிகம் உள்ளது என தற்போது எண்ணத் தோன்றுகின்றது.

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சிறீலங்கா மக்கள் எதிர்கொண்டுள்ள போதும், அவர்கள் தமது இனவாதச் சிந்தனைகளில் இருந்து வெளிவரவில்லை என்பது தெளிவானது.

மறுவளமாக, வடக்கு கிழக்கு உட்பட்ட தமிழர் தாகயத்தை நாம் நோக்கினால், அங்கு ஒரு மாற்றம் ஒன்றுக்கான ஆரம்பம் தோன்றியுள்ளது. ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகளின் நாமத்தை கூறி இரு தடவைகள் அதிகாரத்தை கைப்பற்றிய கூட்டமைப்பு இந்த முறை வடக்கில் 37 விகித வாக்கு வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதன் மூலம் கடந்த முறை 16 உறுப்பினர்களை கொண்ட அதன் பலம் தற்போது 10 ஆக குறைந்துள்ளது. மறுவளமாக புதிதாக கட்சி ஆரம்பித்து மூன்றாவது முறை நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட தமிழத் தேசிய மக்கள் முன்னனி 2 உறுப்பினர்களையும், முதல் முறை நாடளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி 1 உறுப்பினர் பதவியையும் பெற்றுள்ளது. இது தமிழ்த் தேசிய சிந்தனைக்கான மாற்றமாகும்.

அது மட்டுமல்லாது, கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் தேசியவாதிகள், மக்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் போன்றவர்களே அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். உதாரணமாக திருமலையில் போட்டியிட்ட குகதாசன், யாழில் போட்டியிட்ட சசிகலா ஆகியோரை கூறலாம்.

அதாவது இனவாதத்தை நோக்கி தெற்கு தள்ளப்படும்போது, அதற்கு சமாந்திரமாக தமிழர் தரப்பும் எதிர்த்திசையில் பயணிப்பதை தான் அவதானிக்க முடிகின்றது.

இருந்தபோதும், கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோரும், வடக்கில் அங்கஜனும், டக்ளசும் வெற்றி பெற்றது என்பது ஒட்டுக்குழுக்களினதும், தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளினதும், எழுச்சியாக கொள்ள முடியாது.

மறுவளமாக போரினாலும், சிறீலங்கா அரசின் தொடர் அடக்குமுறைகளினாலும் பாதிக்கப்பட்டு வறுமை, தொழிலின்மை மற்றும் அன்றாடப் பிரச்சனைகள் போன்றவற்றால் வாடிய மக்களை இந்த கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக உதவிகளை வழங்கி, தன்வசப்படுத்தியதே இந்த மாற்றத்திற்கான காரணம்.

இந்த அணுகுமுறையில் எமது தேசிய நலன்சார் அரசியல் கட்சிகள் தவறிழைத்துள்ளனர் என்றே கொள்ள முடியும். சாதாரண மக்களுடன் இணைந்து அவர்களின் அன்றாட வாழ்வில் கலந்து அவர்களின் பிரச்சனைகளை அணுகுவதில் தாயகத்து அரசியல் கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகமும், சரியான அரசியல் இலக்கை நோக்கி தமது வளங்களை ஒன்று குவிக்காது, பரவாலக மேற்கொண்ட உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் மக்களுக்கு சரியான நம்பிக்கையை ஊட்டவில்லை என்பதுடன் மக்களை மறுவாழ்வுடன் கூடிய அரசியல் மயப்படுத்தவில்லை.

எனவே தான் இனப்படுகொலையை மேற்கொண்ட கேணல் ரத்தினபிரியா முல்லைத்தீவில் கணிசமான ஆதரவை பெறும் அளவுக்கு எமது அரசியல் பலவீனமடைந்துள்ளது.

தென்னிலங்கையை பொறுத்தவரையில், அங்கு பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த மிகப்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வாரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது என்பதை விட வரலாற்றில் இருந்து அழிந்து போகும் நிலையை அது எட்டியுள்ளது என்றே கூற முடியும். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15 விகித வாக்குகளை பெற்று, தமிழரசுக் கட்சியைவிட குறைந்த வாக்கு பெற்ற கட்சி என்ற நிலையை அது எட்டியுள்ளது.

அதாவது பழம்பெரும் யானைச் சின்னம் என்பது கூட தற்போதைய கருத்துருவாக்கத்தினால் மக்களின் மனதில் இருந்து அகற்றப்பட்டதே அங்கு நிகழ்ந்துள்ளது. எனவே மக்களுடன் இணைந்து பயணிக்காது விட்டால், இது தமிழ்க் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் நடக்கலாம்.

கோத்தபாயா தரப்பை பொறுத்தவரையில், அவர்களுக்கு கிடைத்த இந்த 145 உறுப்பினர்கள் என்பது இலகுவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டுவதற்கு போதுமானது. எனவே 19 ஆவது திருத்தச்சட்டத்தின் நீக்கம் அல்லது மாற்றம் மற்றும் ஏற்கனவே சிதைந்துபோயுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தின் முற்றான மாற்றம் என்பவற்றை புதிய அரசு மேற்கொள்ளும் என்பது தெளிவானது.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வில்லை, அது இந்தியாவின் ஆளுமைக்கான குறியீடு, எனினும் இதன் மூலம் தமிழர் தரப்பு உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற தீர்வு முறையில் இருந்து வெளியேறி வெளியக சுயநிர்ணய உரிமையை நோக்கி நகர்வதற்கான ஏது நிலைகள் வலுப்படும் என்பதே யதார்த்தமானது.

எனவே தற்போது வெற்றி பெற்றுள்ள தேசிய சிந்தனை கொண்ட தமிழ் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பிற்கான நீதி கோருதல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் மக்கள் மற்றும் அனைத்துலக சமூகம் ஆகியவற்றுடன் ஒரு நல்ல உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது, உள்ளக அரசியலிலும் மக்களுடன் இணைந்து பணியாற்றி மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்த கட்சிகள் செய்வதுடன், அதற்கான ஏது நிலைகளை உருவாக்குவதில் புலம்பெயர் சமூகம் தனது பிரிவினைகளை கைவிட்டு ஓரு அணியில் நின்று உதவிகளை வழங்கவேண்டும்.

ஒரு கட்சியின் பலம் என்ற நிலைபோய் பல கட்சிகள் என்ற நிலை வந்திருந்தாலும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையில் இந்த பிரநிதிகள் தமது கட்சி வேறுபாடுகளை மறந்து ஒரு அணியில் குரல் கொடுக்க வேண்டியதே தற்போதைய பிரதான தேவையாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here