கோட்டாவின் 20 ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்‌ஷ ‘வீட்டோ’ செய்வாரா?

ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனையிட்டு ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விஷேட குழு ஒன்றை அமைத்தது இந்த நெருக்கடிகளின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்தியது.

பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாகத்தான் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்தது. இதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைபுக்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, இதனை விரைவில் நிறைவேற்றிவிடுவதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பு துரிதமாக வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றது.

ஜனநாயகத்தைப் பலப்படுத்திய ’19’

சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் என்னதான் போராட்டங்களை நடத்தினாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த ஆசனங்களைப் பெற்றுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னால் வைத்துள்ள கால்களைப் பின்னால் எடுக்கப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிவிட்டது.

20ஆவது திருத்தம் என்பது அடிப்படையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வரையறையற்ற முறையில் வழங்குகின்றது. 2015இற்கு முன்னர் அவ்வாறான ஒரு நிலைதான் இருந்தது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறையற்றதாக இருந்ததுடன், பாராளுமன்றம் அமைச்சரவை என்பன  வெறும் ‘பொம்மை’யாக இருந்தன. 18ஆவது திருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஷ மேலும் அதிகரித்திருந்தார். அது சர்வாதிகார ஆட்சி ஒன்றை உருவாக்கியிருந்த நிலையில்தான், 2015இல் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்களின் பிரதான கோஷமாக இருந்தது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவது என்பதுதான். 2015இல் உருவாகிய ‘நல்லாட்சி’ என்ற பெயரிலான மைத்திரி – ரணில் அரசாங்கம் அதனுடைய முதலாவது செயற்பாடாக 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தது. பாராளுமன்றமும் அமைச்சரவையும் இதன் மூலம் பலம்வாய்ந்தவையாக மாற்றப்பட்டன. சுயாதீன ஆணைக் குழுக்களை ஜனாதிபதியினாலோ அரசாங்கத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதியால் ஒருவருடத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

உண்மையில் 19ஆவது திருத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தியது.

சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் ’20’

இப்போது, ஆகஸ்ட்டில் நடைபெற்ற தேர்தலில் பொது ஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. தமக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு கிடைத்துள்ள சுதந்திரமாகவே அவர்கள் இந்த வெற்றியை எடுத்துக்கொள்கின்றார்கள். அதனால், அவர்களுக்கு உடனடித் தேவையாகவுள்ளவைகளை 20ஆம் திருத்தத்தின் மூலமாகப் பெறப்போகின்றார்கள். இரண்டாம் கட்டமாக புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். அதற்காக நிபுணர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் திகதி 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஒக்ரோபர் மாதத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதும், அதன் பின்னர் அடுத்த வருட முற்பகுதியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதும்தான் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்ததாக தமது ஆசனங்கள் இருப்பதால், இதனைத் தம்மால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. ஒரு – சில எம்.பி.க்களை வாங்கிவிட முடியும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். அதில் அவர்களுக்குத் தேவையான அனுபவம் உள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உட்பட எதிரணி தரப்பில் உள்ள சிலர் அரசுடன் இணைவதற்கான பேரங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன.

ஆளும் கட்சியில் 150 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதிலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 19ஆவது திருத்தம் வந்தபோது அதனையும் ஆரரித்தவர்கள்தான். 2015 முற்பகுதியில் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட்ட போது, ஒரேயொரு உறுப்பினர் மட்டும்தான் அதற்கு எதிராக வாக்களித்தார். தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள், குறிப்பாக மைத்திரி தரப்பில் இருப்பவர்கள் ’19’ ஐ ஆதரித்தார்கள். அதனை இல்லாமல் செய்யும் வகையில் தற்போது கொண்டுவரப்படவுள்ள ’20’ ஐ ஆதரிக்கவும் அவர்கள் தயாராகத்தான் உள்ளார்கள்.

பிரஜாவுரிமையும் பசில் ராஜபக்‌ஷவும்

இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளவர்களைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அமைச்சராக்குவதும், ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் – பிரதமர், அமைச்சரவை, பாராளுமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவற்றை ‘பொம்மைகள்’ ஆக்குவதும்தான் இந்த 20 ஆவது திருத்தத்தின் உடனடி நோக்கம். இரட்டைப் பிரஜாவுரிமை என்னும் போது, பசில் ராஜபக்‌ஷ அமெரிக்க பிரஜாவுரிமையையும் கொண்டிருக்கின்றார். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்குதற்காகத்தான் இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்படுவதாகவும் ஒரு தகவல் உள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கான வியூகத்தை வகுத்துச் செயற்பட்ட ‘வியத்மக’ என்ற அமைப்புத்தான் 20ஆவது திருத்தத்தைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகின்றது. சிங்கள தேசியவாதத்தை இலக்காகக் கொண்ட தொழில்சார் வல்லுனர்கள், புத்திஜீவிகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாவை பலப்படுத்துவது அவர்களுடைய நோக்கம். அதற்காகத்தான் 20ஆவது திருத்தத்தை அவசரமாக அவர்கள் கொண்டுவந்தார்கள்.

ஜனாதிபதியைப் பலப்படுத்தும் அதேவேளையில், அதன் மறுபக்கத்தில் பிரதமரை வெற்றுப் பொம்மையாக்குவது இந்த 20 ஆவது திருத்தத்தின் இலக்குகளில் ஒன்று. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தற்போது இதனால் குழப்பமடைந்தவராகக் காணப்படுகின்றார். மகிந்த வெற்றுப்பொம்மையாக இருந்துவிடக்கூடிய ஒருவரல்ல. அதனால்தான், 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை அவர் நியமித்தார். அந்தக் குழு திருத்தத்துக்கு மேலும் சில திருத்தங்களை முன்வைத்திருக்கின்றது. மகிந்தவுக்கு ஆதரவான அமைச்சர்கள் “20” க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியிருப்பதையும் காணமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டு வருடங்களுக்குள் ஓய்வு பெறுவார் எனவும், அவரது மற்றொரு சகோதரர் பிரதமராகப் பதவியேற்பார் எனவும் கொழும்பு ‘டெயிலி மிரர்’ சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மஹிந்தவின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவரும் நிலையில்தான்  இந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியான மறுதினம் மஹிந்த ராஜபக்‌ஷ அதனைத் திட்டவட்டமாக மறுத்திருந்தார். 20 நடைமுறைக்கு வருகின்றதோ இல்லையோ, அரசின் உயர் மட்டத்தில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை – அதிகாரப் போட்டியை வெளிப்படுத்தியிருக்கின்றது.

அகிலன்