உலக அமைதிக்கானத் தினத்தில், ஐ.நாவின் வலியுறுத்தல்

ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21ம் திகதி அன்று உலக அமைதிக்கான தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாளில் போர் நிறுத்தம் மற்றும் அகிம்சையினைப் பின் பற்றுமாறும் ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஐ.நா விடுத்துள்ள அறிவித்தலில்,

இந்த வருடம் நம்முடைய பொதுவான எதிரியாக உருவெடுத்திருப்பது கோவிட் 19 என்னும் வைரஸே. இது உலக அமைதி பாதுகாப்பு மக்கள் நலன்களைப் பாதித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர்  அந்தோனியோ குத்தேரசு(António Guterres), உலக நாடுகளை தங்களுடைய பகைமையை மறந்து  இந்த உலகளாவியத் தொற்றை எதிர்த்துப் போரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஐ.நா 2020 ம் ஆண்டை, கவனித்தல் மற்றும் கற்றலுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. இது ஐ.நா சபையின் 75 ஆவது ஆண்டு முடிவையும் குறிப்பதாக உள்ளது.

கற்றலில் கவனம் செலுத்துவதன்  மூலம்  அமைதியான மற்றும் சிறப்பான எதிர்காலத்தையும் உலகில் உருவாக்க முடியும் என்று எதிர்பாக்கிறது ஐ.நா.

நாம் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான போரில் இருக்கிறோம். உடலால் விலகியிருக்கிறோம். இருப்பினும் உலக ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக அனைவரும் உள்ளத்தால் இணைந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலக அமைதி தினத்திற்கான ஆய்வு பொருளாக ஐ.நா அறிவித்துள்ள ‘அமைதிக்காக ஒன்று படுங்கள்’ என்பது உலக அமைதி, அன்பைப்பரப்புதல் ஆகியன இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப்  போராடுவதற்கு நம்பிக்கையைக் கொடுக்கும் என்று ஐநா கூறியுள்ளது.

இந்த அமைதிக்கான தினம்,  ஐ.நா பொதுச் சபையினால் 1981ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது. 2001  ஆண்டு  ஐ.நா சபையில் நடந்த வாக்கெடுப்பின் படி, இந்த நாளில் அகிம்சை மற்றும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 1987 இல் இந்தக்காலப்பகுதியில் தான் அண்ணல் திலீபன் ஈழத்தமிழரும் உலக சமாதானத்தின் பெயரால் தம் உரிமைகளை பெறப் உரித்துடையவர்கள் என வலியுறுத்தி, அதியுச்ச அகிம்சை வழி கோரிக்கைகளை உலகின் முன் வைத்தார். ஆனால் உலகம் கண்களை மூடிக்கொண்டு அவர் உயிரை பறித்தது என்பதை மறந்துவிட முடியாது. இந்த சூழலில்,  இது மனித உரிமை பேசும் ஐ.நா போன்ற அமைப்புகளின் வெற்றுக்கோசங்களா? என தமிழ் மக்கள் அங்கலாய்த்து நிற்கின்றனர்.