தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியா தலையிட வேண்டும்-சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியா தலையிட வேண்டும். இறுதி யுத்தத்தை நிறைவு செய்வதற்கு உதவிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் உதவ வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,  நாட்டின் முக்கிய பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் எதையும் கூறவில்லை என்பது கவலையளிக்கிறது என்றார்.

“நாட்டின் முக்கியமான பிரச்சினை தொடர்பில், நாட்டின் தலைவர் பேசாமல் போனது ஒரு துரதிஸ்டமானது. தமிழ்த் தேசிய இனம், கடந்த 80 வருடங்களாகப் பல்வேறு இனப் படுகொலைகளுக்கு முகங்கொடுத்திருந்தது. இதனாலேயே, பல போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தப் போராட்டங்கள் மௌனிக்கப்பட்டுவிட்டன.

“தாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு வராமல் இருப்பதற்கு, நாட்டில் கொண்டுவரப்படும் சட்டங்களும் சிங்கள மக்களின் மனோபாவங்களும், சிங்கள மக்களை வழிநடத்தும் தலைவர்களின் எண்ணங்களுமே காரணம்.

“தற்போதைய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதற்காக மமதையோடு செயற்பட்டால் இந்நாடு மீண்டும் இனவாதம் என்கிற சகதியில் தள்ளப்படும்.

“சிங்களவர்களும் தமிழர்களும், ஒரே தீவில் வாழ்ந்து வந்தாலும் அவர்களுடைய அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் வெவ்வேறானது. அதனைப் புரிந்துக்கொண்டு கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டிருந்தால் அபிவிருத்தி உச்சத்தைக் கண்டிருக்க வேண்டும்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் இதுவரையில் நீக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம், 3 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவ்வாறான பிரச்சினைகளாலேயே, நாடு இன்னும் முன்னேறாமல் இருக்கிறது.

“அரசாங்கத்திடம் எதையும் செய்யக்கூடிய பெரும்பான்மை இருக்கிறது. அதனூடாக நல்ல விடயங்களைச் செய்யுங்கள். மாற்றம் என்பது சிங்களவர்களிடமிருந்து வரவேண்டும். மாற்றத்தை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது சிங்கள மக்கள், தலைவர்களிடமிருந்து வர வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியா தலையிட வேண்டும். இறுதி யுத்தத்தை நிறைவு செய்வதற்கு உதவிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் உதவ வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.