நவாலி புனித பீற்றர் ஆலய தமிழின அழிப்புக் கால் நூற்றாண்டு

சிறிலங்கா இராணுவத்தினர் தமது ‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கைக்கு வழிவிட்டு ஆலயங்களில் மக்களைத் தஞ்சம் அடையுமாறு அறிவித்திருந்தனர்.

இந்த வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்ப்பாணம் நவாலிப் புனித பீற்றர் ஆலயத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். 09.07.1995ம் ஆண்டு திட்டமிட்ட முறையில் சிறிலங்கா வான்படையினர் 13 குண்டுகளைத் தொடர்ச்சியாக இந்த ஆலயத்தின் மீது வீசி 157 ஈழத்தமிழ் உயிர்களை இனஅழிப்புக்குள்ளாக்கி அந்த ஆலயத்தையும் சேதப்படுத்தினர்.

சிறிலங்காப் படையினர் தாமே மக்களைச் சரணடைய வைத்த மக்கள் மேல் யுத்தக் குற்றச் செயலைச் செய்து, மனிதாயத்திற்கு எதிரான குற்றமுமாக்கி ஈழத்தமிழின அழிப்பு ஒன்றை நடாத்திய கால் நூற்றாண்டு கடந்த வாரம் 09ம் திகதி நிறைவு பெற்றது.

உயிர் வாழும் உரிமை, உடலைப் பேணும் உரிமை,வழிபாட்டுச் சுதந்திர உரிமை என்னும் அடிப்படை மனித உரிமைகளை எவ்வித அச்சமுமின்றி அழித்து ஈழத்தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களின் அரசியல் பணிவைப் படைபலம் கொண்டு பெறும் சிறிலங்கா அரச செயற்திட்டத் தொடரின் ஒரு சிறு உதாரணமாக நவாலி பீற்றர் ஆலய ஈழத்தமிழின அழிப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் காட்சியளிக்கிறது.

இன்று நவாலி ஈழத்தமிழினப் படுகொலை நடாத்தப் பெற்று கால் நூற்றாண்டு நிறைவு பெற்ற நிலையில் அன்று தனது தமிழ் வெளிவிகார அமைச்சரான கதிர்காமரைக் கொண்டு நவாலி ஆலயத் தாக்குதலைத் தமிழீழ விடுதலைப்புலிகளே செய்தார்கள் என உலகுக்கு உண்மைக்கு மாறான தகவலை அளிப்பித்த சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள், ‘இந்நிகழ்வு தவறுதலாக நடைபெற்ற ஒன்று’ என கால் நூற்றாண்டின் பின்னர் மற்றொரு நியாயப்படுத்தலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் இன்றைய கோத்தாபாய அரசாங்கம் தனது 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பை “நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு” க்களைக் கொண்டு உலக நாடுகளின் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையம் தனக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக தமது இனஅழிப்பால் பாதிக்கப் பட்டவர்களுக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்க்கும் பொறுப்புக் கூறி நீதி வழங்கி புனர்வாழ்வு அளிக்கும் புனர் நிர்ணமானத்தைச் செய்யாது தப்பிக்க முயற்சிக்கும் அதே பாணியிலேயே நவாலி புனித பீற்றர் ஆலய தமிழின அழிப்புக்கும் சந்திரிகா பண்டாரநாயக்கா அம்மையாரும் பொறுப்பு ஏற்காது தவறி நடந்த நிகழ்வு என அச்செயலை மடைமாற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு சிங்களத் தலைமைகள் எல்லாமே பௌத்த சிங்கள பேரினவாதச் சிந்தனையிலே மற்றையவர்களின் மதசுதந்திரத்தை மறுத்து அவர்களின் வழிபாட்டு இடங்களை அழிப்பதைத் தமது அரச கொள்கையாகவே தொடர்வதன் இன்றைய உதாரணமாகவே தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிகுந்த பாடல் பெற்ற சைவத் திருக்கோயிலான திருக்கோணேஸ்வரம் உட்பட 25 கோயில்கள் அவை பௌத்த விகாரைகளுக்குரிய நிலத்தில் கட்டப்பட்டவை என்ற கருத்தைப் பௌத்த பிக்குகள் முன்வைக்கவும் காரணமாகிறது.

சைவத் திருக்கோயில்களின் வளவுக்குள் பௌத்த சின்னங்களைப் புதைப்பதற்கான புதிய செயலணியும் இன்றை அரச அதிபரால் நியமிக்கப்பட்டு அது தனிச்சிங்களவர்கள் அணி என எழுந்த எதிர்ப்பைச் சமாளிக்க ஒரு தமிழரையும் ஒரு முஸ்லீமையும் நியமிக்கப் பரிந்துரைக்குமாறு அவரின் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து வவனியாவில் போராட்டம் நடத்திய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், இந்தியப் பிரதமரை தலையிட்டு இந்து வழிபாட்டிடங்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துத் தங்களின் பாதுகாவலர்களை அழிக்க இந்திய காங்கிரஸ் தலைமைகளே பச்சைக்கொடி காட்டியதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களும் தாங்கள் வாழும் நாடுகளின் அரசுக்களையும் உலக நாடுகளின் மன்றத்தையும் உலக அமைப்புக்களையும் ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அவர்களின் குரலை மதித்து அங்கு தொடரும் ஈழத்தமிழினப் பண்பாட்டு இனஅழிப்பையும், ஈழத்தமிழின அழிப்பையும் தடுத்து நிறுத்துமாறு வேண்டக் கடமைப்பட்டுள்ளனர்.