“பாலு நீ போயிட்ட, உலகம் சூனியமாக போச்சு – இசைஞானி இளையராஜா

“பாலு, சீக்கிரம் எழுந்து வா. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கலை. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காக பாடுறதுக்காக போயிட்டியா, இங்கே உலகம் சூனியமாக போச்சு. உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியலை. பேசறதுக்கு பேச்சு வரலை. சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுன்னே தெரியலை. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவில்லை,” என்று இசை அமைப்பாளர் இளையராஜா,  எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து  இரங்கல் தெரிவித்து வெளியிட்ட  காணொளியில் கூறியுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பி, திரைப்படங்களுக்கு பாடுவது மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளையும் நடத்தி மெல்லிசை குழு கச்சேரிகளிலும் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் பெரும்பாலும் தமிழில் பாடிய பாடல்கள், இளையராஜா இசை அமைத்த படங்களில் இடம்பெற்றவை.

2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் டொரோன்டோவில் எஸ்பிபி50 என்ற பெயரில் உலகம் தழுவிய இசை நிகழ்ச்சிப் பயணத்தை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கினார்.  அப்போது திடீரென அவரது இசை நிகழ்ச்சிகளில் தனது பாடல்களை பாட இளையராஜா ஆட்சேபம் தெரிவித்தார். அது பின் இருவருக்கிடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டில் இளையராஜாவின் 76ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இருந்த முரண்பாடும் மறைந்து போனது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது இளையராஜா ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் “எழுந்து வா பாலு” என்று உருக்கமாகப் பேசிய இளையராஜா, விரைவில் எஸ்.பி.பி குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்போது தற்போது எஸ்.பி.பியின் மறைவுக்கு மீண்டும் அவர் துயரத்துடன் மற்றொரு காணொளியை பகிர்ந்திருக்கிறார்.

எஸ்.பி.பி சாதனைகள்

1980-ல் ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்னாடக இசையை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடி முதல்முறையாக சிறந்த பாடகர் என்ற தேசிய விருதை ‘ஓம்கார நாதானு’ பாடலுக்காக பெற்றார். அடுத்த ஆண்டே ‘ஏக் துஜே கே லியே’ இந்தி படத்தின் ‘தேரே மேரே பீச் மே’ பாடலுக்காக தேசிய விருதை மீண்டும் வென்றார்.

அதுமுதல் இந்தியிலும்   எஸ்.பி.பி குரலுக்கு வரவேற்பு கூடியது. தேசிய அளவில் முக்கியமான பாடகர் என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார். சல்மான் கானின் ஆரம்பகால காதல் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

‘சாகர சங்கமம்’, ‘ருத்ரவீணா’ (தெலுங்கு), ‘சங்கீதசாகர கனயோகி பஞ்சாக்‌ஷர கவை’ (கன்னடம்), ‘மின்சார கனவு’ படத்தின் ‘தங்கத் தாமரை மகளே’ பாடல்களுக்கும் எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மொத்தம் 6 தேசிய விருதுகள்,  பத்ம பூஷண் என தேசிய அளவில் உயரிய அங்கீகாரங்களை பெற்ற எஸ்.பி.பி  6 முறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றவர்.

இதுதவிர, சிறந்த பாடகர், டப்பிங் கலைஞர், இசையமைப்பாளர், உறுதுணை நடிகர் என பல்வேறு பிரிவுகளில் ஆந்திர மாநில அரசின் ‘நந்தி’ விருதுகளை 25 முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தோடு சேர்த்து 4 முறை சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் மாநில விருது, 3 முறை கர்நாடக அரசின் மாநில விருதுகளை பெற்றுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என எண்ணற்ற விருதுகள் எஸ்பிபியை தேடி வந்துள்ளன.

திரைப் பாடல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், தொலைக்காட்சித் தொடர் முகப்பு இசைப் பாடல்கள் என அதிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துள்ளார் .

எஸ்பிபி. மொத்தம் 45 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பங்காற்றியுள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்தும் வெற்றி கண்டுள்ளார். இன்று தமிழ் திரையுலகில் தல என ரசிகர்கள் கொண்டாடும், நடிகர் அஜித்தை முதன் முதலில் ‘Prema Pusthakam’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.

100 படங்களுக்கும் மேல் பின்னணி பேசியுள்ளார்.

45 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பங்காற்றியுள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்தும் வெற்றி கண்டுள்ளார். பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.

எஸ்பிபி தனது தந்தையின் நினைவாக எஸ்பிஎஸ் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.