பிரித்தானிய- சீன வர்த்தகப் போர்- வேல் தர்மா

102

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இரு நாடுகளும் உணர்ந்துள்ள நிலையில், பிரித்தானிய – சீன வர்த்தகப் போர் ஆரம்பிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பிரித்தானியக் கைப்பேசித் தொடர்பாடல் துறையில் சீன நிறுவனமான ஹுவாவேயின் மென்பொருளும், வன்பொருளும் பாவிக்கப்பட்டன. 5ஜீ அலைக்கற்றையை அறிமுகம் செய்வதில் பல நாட்டு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், சீனாவின் ஹுவாவே நிறுவனம் அதில் முந்திக் கொண்டது. பிரித்தானியாவில் ஹுவாவே 5ஜீ அலைக்கற்றையை அறிமுகம் செய்ய பிரித்தானிய அரசு அனுமதித்திருந்தது.

5ஜீ அலைக்கற்றையில் முந்திய சீனா

சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப்பட்டால், உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும், அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில் நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

சீன நிறுவனங்கள் மீது சீன அரசு நிர்ப்பந்தம்.

சீன நிறுவனம் ஒன்று தன்னிடம் உள்ள பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சட்டம் உள்ளது. அதன் படி ஹுவாவே நிறுவனம் தன்னிடம் உள்ள எந்த நாட்டினதும் தொடர்பாடல் தரவுகளை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் அமெரிக்கா தனது நாட்டில் ஹுவாவே நிறுவனம் 5ஜீ அலைக்கற்றை வழங்கலில் ஈடுபடுவதை தடை செய்ததுடன் தனது நட்பு நாடுகளையும் தடை செய்யும்படி வலியுறுத்தியது.

பிரித்தானிய நிபுணர்கள் தமது நாட்டின் தொடர்பாடலில் ஹுவாவே ஈடுபடுவதால் வரும் ஆபத்து சமாளிக்கக் கூடியது எனத் தெரிவித்தனர். அதனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை புறம் தள்ளி பிரித்தானியா ஹுவாவே தமது நாட்டில் தொடர்ந்து செயற்படுவதை அனுமதித்தது. அமெரிக்கா திரைமறைவிலும், பகிரங்கமாகவும் தனது எதிர்ப்பைத் தொடர்ந்தது.

பின்னர் அமெரிக்கா ஹுவாவே நிறுவனத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் மின்தேக்கிகளை (capacitors) விற்பனை செய்வதைத் தடை செய்தது. அதனால் ஹுவாவே தனது மின்தேக்கிகளை தானே உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதனால் பிரித்தானிய நிபுணர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். சீனாவில் உருவாக்கப்படும் மின்தேக்கிகள் உளவுத் தகவல் திரட்டுவதை தடுக்க முடியாது என்றனர். இதனால் பிரித்தானியா ஹுவாவேயிடமிருந்து புதிய சேவைகளைப் பெறுவதை நிறுத்தியதுடன், ஏற்கனவே உள்ள ஹுவாவேயின் மென்பொருட்களும், வன்பொருட்களும் படிப்படியாக அகற்றப்படும் எனவும் அறிவித்தது.

சீனாவிற்கு எதிரான பிரித்தானிய நகர்வுகள்

சீனாவிற்கு எதிராக கோவிட்-19 தொற்று நோய்ப்பரவல் தொடர்பான விசாரணையை பிரித்தானியாவும் ஆதரித்தது. தென் சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாட்டை பிரித்தானியா எதிர்த்ததுடன், சீனா தனக்கு சொந்தமானது எனச் சொல்லும் கடற்பரப்பிற்குள் தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பியது. ஹொங் கொங்கில் சீனா அறிமுகம் செய்த பாதுகாப்புச் சட்டத்தையும் பிரித்தானியா கடுமையாக எதிர்த்தது. இவை யாவும் பிரித்தானியா மீது சீனாவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹொங் கொங் மக்களுக்கு பிரித்தானியா வதிவிட உரிமை வழங்குவதையும் சீனா ஏற்றுக் கொள்ள மாட்டாது.

பிரித்தானியாவில் சீனாவின் அணு மின் உலை

பிரித்தானியாவில் உள்ள எட்டு அணு மின் உலைகளும் 2030ஆம் ஆண்டளவில் மூடப்பட வேண்டுமளவிற்கு பழையனவாகி விட்டன. குறைந்த செலவில் அணுமின் உலையை அமைக்க சீனாவின் சேவையை பிரித்தானியா 2016இல் நாடியிருந்தது. அதற்கும் அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவால் பிரித்தானியாவில் அணு மின் உலையை நிர்மாணிக்க முடியும் என்றார். பிரித்தானியாவில் பாதுகாப்பான ஒரு அணு மின் நிலையத்தை அமைத்தால் அது உலக அரங்கில் சீனாவிற்கு பெருமை தேடித் தருவதுடன் பல நாடுகள் சீனாவின் சேவையை நாடலாம். இப்போது பிரித்தானியா சீனாவின் அணு மின் உலையை நிறுத்த நகர்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு பொருளாதாரப் போரை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது.

சீன பிரித்தானிய உறவு

டேவிட் கமரூன் தலைமை அமைச்சராக இருந்த போது சீன – பிரித்தானிய உறவு சிறந்ததாக இருந்தது. அப்போதுதான் பிரித்தானியாவில் அணுமின் உலை அமைக்கும் திட்டம், தொலைத் தொடர்பில் ஹுவாவே போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. தற்போதிருக்கும் தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் அடிப்படையில் சீனாவை விரும்பாதவர். அதை அவர் இலண்டன் நகர பிதாவாக இருக்கும் போதே தனது செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பு எப்போதும் இல்லாத ஜோன்சனின் அமைச்சரவையில் அதிக இந்திய வழித்தோன்றல்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய – பிரித்தானிய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அது கொண்டிருக்கலாம். இந்திய பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோஸிஸ் உரிமையாளரின் மருமகன் பிரித்தானியாவின் நிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நிர்ப்பந்தத்தால் அணுமின் உலை, 5ஜீ நிறுத்தப்படுகின்றன. தன்னை சினப்படுத்தும் நாடுகளை கடுமையாக தண்டிப்பதை சீனா வழமையாகக் கொண்டுள்ளது

பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தேவை

கோவிட் -19 தொற்று நோய் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்த அளவு பாதிக்கப்பட்ட சீனாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. தற்போது சீன – பிரித்தானிய வர்த்தகத்தில் 150,000 பிரித்தானிய வேலைவாய்ப்புக்கள் தங்கியுள்ளன. கடந்த 14 ஆண்டுகளில் சீனாவிற்கான பிரித்தானிய ஏற்றுமதி ஆறு மடங்கால் அதிகரித்துள்ளது. பல சீன மாணவர்கள் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் கல்வி பயில்வது அவற்றின் வருவாயை பெருமளவு உயர்த்தியுள்ளது. பிரித்தானியப் பெரு முதலாளிகள் சீனாவுடனான வர்த்தகப் போரை விரும்பவில்லை.

சீனாவின் பதிலடி எப்படி இருக்கும்?

சீனா பிரித்தானியாவின் முன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளி. பிரித்தானியாவில் இருந்து Scotch whisky or Jaguar Land Rover, போன்றவற்றின் இறக்குமதியை சீனா தடை செய்யலாம். Jaguar Land Rover விற்பனையில் 20% சீனாவிற்கு செல்கின்றது.

HSBC and Standard Chartered ஆகிய வங்கிகளும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம். இந்த இரண்டு வங்கிகளும் சீனாவிலும் ஹொங்கொங்கிலும் தமது வருவாய்க்கு பெரிதும் தங்கியிருக்கின்றன. பொருளாதாரப் போர் என்பது இரு தரப்புக்களையும் பாதிக்கக் கூடியது.