தொல்பொருள் தொடர்பான செயலணியில் தமிழ், முஸ்லீம் பிரதிநிதித்துவம்;கண்துடைப்பு நடவடிக்கையா?

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி முற்றுமுழுதாக சிங்களவர்களை உள்ளடக்கிய பௌத்த சிங்களமயமாக்கலை நோக்கமாக கொண்ட அமைப்பு என
பல்வேறு தரப்புகளில் இருந்து பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவந்தது நாமறிந்ததே.

இந்த நிலையில் தற்போது , தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரித்தறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இச் செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது சம்பந்தமாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் அது தொடர்பில் அமைச்சரவை பத்திரங்களை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

நேர்மையான காரணங்களுக்காக இந்த செயலணி உருவாக்கப்பட்டிருப்பின் துறைசார் வல்லுநர்களை,அனைத்து இன பிரதிநிதிகளை, உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும்.கிட்டத்தட்ட பௌத்த பிக்குகளை மட்டுமே கொண்டு,படைத்தளபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த செயலணி உள்நோக்கம் கொண்டதென்பது வெளிப்படை.

எது எப்படி இருந்தபோதும் நியமிக்கப்படப்போகும் தமிழ்,முஸ்லீம் பிரதிநிதிகள் தீவீரவாத இனவாத பிக்குகளை உள்ளடக்கிய குழுவில் வெறும் பொம்மைகளாகவே இருக்கமுடியும் என்கின்றனர் நோக்கர்கள்.மேலும் இந்த செயலணியில் ஓரிரு தமிழர்கள் முஸ்லீங்கள் அங்கம் வகிக்கும் போது அது அவர்கள் மேற்கொள்ளும் தமிழ் ,முஸ்லீம் இனவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தவே உதவும்.