அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மக்களுக்கு ஆபத்து

86
113 Views

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைவிட மோசமான நிலைமை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் இ.விஸ்னுகாந்தன்  குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தானிலிருந்து தௌஹீத் ஜமாத் அமைப்பினர் இலங்கைக்கு வருகின்றனர் என்றும் அவர்கள் கல்விக்காக வரவில்லை, ஆயுதப் பயிற்சிக்காகவே வருகின்றனர் என்றும் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்படப்போகின்றதென்றும் நான் 2015ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தேன். ஆனால் கடந்த அரசாங்கமானது அதனை கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமாக இருந்தது.

ஆனால் அதைவிட மோசமான நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மூலமாக ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் பிரச்சினையானது இன்று நேற்றல்ல பலநாட்களாக நடந்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் அடாவடித்தனமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்.

கடந்த அரசாங்கமோ அல்லது தற்போதுள்ள அரசாங்கமோ இவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்று ஏறாவூர் நீதிமன்றத்தில் அவர் 30ஆம் தகதி ஆஜராகவேண்டுமென அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இவருடைய அடாவடித்தனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது.

கிராமசேவகரை தாக்குவது, மின்சாரசபை ஊழியரை தாக்குவது,என அரச உத்தியோகத்தர்களை தாக்குவதென்பது இவருக்கு அரச உத்தியோகத்தர்கள் மீது வெறுப்புணர்வு உள்ளதென்பதையே காட்டுகின்றது.

அரச உத்தியோகத்தர்களை இவர் தாக்குகின்றாரென்றால் இவருக்கு அரசஉத்தியோகத்தர்கள் மீது ஏதோ கருப்பு விடயம் இருக்கின்றது.  மேலும் சுமனரத்ன தேரர் என்பவர் சண்டித்தனம் பண்ணுகின்ற ஒருவராக இருக்கின்றார்.

புத்த பெருமானை பின்பற்றுகின்றவர் புத்த துறவியாக இருக்கின்றவர் எல்லாவற்றையும் துறந்து துறவியின் கோலத்தில் இருக்கின்ற ஒருவர் ஒரு எறும்பைக்கூட கொல்லக்கூடாது. அப்படியிருக்கின்றபோது சுமனரத்ன தேரர் மங்களாராம விகாரையினுடைய மதகுருவாக இருப்பதற்குத் தகுதியற்றவர்.

ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டமானது தமிழர்களுடைய பாரம்பரியம் அதிகமாக இருக்கின்ற மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள விகாரையின் விகாராதிபதியாக இருக்கின்றவர் தமிழ் மக்களோடு சார்ந்த தமிழ் மக்களுக்கு சேவையாற்றக்கூடியவராகவும் புத்த பெருமானுடைய விடயங்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவராகவும் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர்தான் மட்டக்களப்பில் இருப்பது நல்லது.

இவர் செய்கின்ற அடாவடித்தனம் எதிர்காலத்தில் மிகவும் மோசமானதொரு நிலைமைக்கு கொண்டுசென்றுவிடக்கூடியது. நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில்கூட சுயேச்சையாக களமிறங்கியிருந்தார். வெளி தேசத்திலிருந்தும் இவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. இன்றும் அவர் வைத்திருக்கின்ற வாகனம், சுகபோகங்கள், அவர் வைத்திருக்கின்ற ஆட்கள் குறித்து  நன்கு விசாரிக்க வேண்டும்.

சுமனரத்தன தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சமன் அனுப்பப்பட்டுள்ளது. 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த தேரரை கைதுசெய்வதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அவரை கைது செய்யப்போனால் நாட்டில் உள்ள பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக அது தவிர்க்கப்பட்டது.

இவர் செய்யும் அட்டகாசத்தினை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று தமிழ் மக்கள் தவறாக கருதிவிடவேண்டாம்.  சுமனரத்ன தேரர் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் வைத்து கைது செய்யப்படுவார். இந்த சுமனரத்ன தேரர் ஊடாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-சிங்கள மக்கள் உறவு பாரதூரமான நிலைக்கு செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இவரின் செயற்பாடு தொடர்ந்து நீடிக்குமானால், அது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும். அதன் காரணமாக இவரை நீதிமன்றம் ஊடாக கைது செய்து இனியொருபோதும் கிழக்கு மாகாணத்தில் காலூன்றாத நிலையினை ஏற்படுத்தவேண்டும்”. என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here