கறுப்புயூலை இனவதையினை ஞாபகப்படுத்தும் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டும் : உருத்திரகுமாரன்

74
41 Views

கறுப்புயூலை இனவதையினை ஞாபகப்படுத்தும் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தியாவின் புவிசார் நலன்களுக்கும், தமிழர்களின் நலன்களுக்கும் உகந்த புதியதொரு அணுகுமுறையினை தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில் இந்தியா எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

கறுப்பு யூலை நினைவுசுமந்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் அழிவும் அவ் இனத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் கறுப்பு யூலை இனவதையினை ஞாபகப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டுமென விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழினவதை கறுப்பு யூலை நினைவுகள் நெஞ்சம் கனக்க சுமந்து நிற்கின்றோம். 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் முதற் கொண்டு கறுப்பு யூலை நாட்கள் உலகை அதிர வைத்தது மட்டுமல்லாது வரலாற்றில் யூலை மாதம் என்பது துயர்படிந்த கறுப்பு நாட்களாகவே இலங்கைத் தீவில் உள்ளது.

இந்த நாட்கள்…

சிறிலங்காவின் அதிபாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் வெலிக்கடைச் சிறையில் சிறைப்பாதுகாவலர்களின் துணையுடன் சிங்களக் கொலைவெறிக் கைதிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகிய தமிழ்ப் போராளிகள் உள்ளடங்கலாக 50க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைக் கொன்று குவித்த நாட்கள்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமது கண்களைத் தானம் செய்து அக் கண்களின் ஊடாக மலரப் போகும் தமிழீழத்தைப் பார்ப்பேன் எனப் பிரகடனம் செய்த போராளி குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்துக் காலால் நசுக்கித் துவம்சம் செய்த நாட்கள்.

தமிழர்கள் என்பதற்காக, தமிழ் பேசுபவர்கள் என்பதற்காக மட்டும் சிறிலங்கா அரசின் துணையுடன் பேரினவாதக் கொலை வெறிக் கும்பல் 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடப் பார்க்காது வீதிகள் எங்கும் வீடுகள் எங்கும் கொன்று குவித்த நாட்கள். 150 000க்கு மேற்பட்டவர்களை அகதிகளாகத் தள்ளியநாட்கள்.

தமிழர்களின் வீடுகளையும், உடைமைகளையும், ஆலயங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏனைய தொழில் முயற்சிகளையும் சிங்கள இனவாதம் கொள்ளையிட்டு அதன் பின்னர் தீயிட்டு அழித்த நாட்கள்.

இந்த நாட்கள் …

சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த பெரும்கொடுமையினை உலகுக்கு வெளிப்படுத்திய நாட்கள்.

இந்நாட்களில் நடந்தவற்றை ஓர் இனப்படுகொலையெனத் தனது அறிக்கையில் அனைத்துலக நீதிக்குழு தெரிவித்திருந்தது.

1983 கறுப்புயூலை இனவதை தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா மனித உரிமைச்சபையில் உறுதியளித்த சிறிலங்கா, இதுவரை இது தொடர்பாக எவ்விதமான விசாரணையைச் செய்யவும் இல்லை. பொறுப்புக்கூறவும் இல்லை. நாசமாக்கப்பட்ட சொத்துக்களுக்கு எவ்வித நிவாரண இழப்பீடுகளும் வழங்கப்படவுமில்லை.

பதின்மூன்று சிறிலங்கா இராணுவம் கொல்லப்பட்டதற்கான எதிர்வினையாக இந்நாட்களைச் சொல்லியிருந்தாலும், இராணுவம் கொல்லப்பட்ட செய்தி பொதுவெளியில் வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இனவதையாக இது அமைந்திருந்தது. முக்கிய இராஜதந்திரிகளின் கணிப்பின்படி தமிழர்கட்கு எதிரான இத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தனர்.

இந்த மாதத்தில்தான் சுதந்திரத்துக்கான தமிழர்களின் கருத்துரிமையினைப் பறிக்கும் வகையில் சிறிலங்கா தனது அரசியலமைப்பில் ஆறாவது திருத்தச் சட்டத்தினையும் கொண்டு வந்திருந்தது.
1983 கறுப்பு யூலை இனவதையினைத் தொடர்ந்து தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கி எழுந்தது. ஓகஸ்ற் 15ம் நாள் மாபெரும் கடையடைப்பினை மேற்கொண்டிருந்தது.

இந்தியாவின் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் பிராந்தியத்தின் அமைதிக்குப் பாதுகாப்பில்லை என்று சிறிலங்காவை எச்சரித்திருந்தார். கறுப்புயூலை தமிழர்களுக்கு எதிரான இனவதையினை ஓர் இனப்படுகொலைக்கான அச்சமாக உள்ளாக்கியதென்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கறுப்புயூலை இனவதைதான் இந்தியாவை ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடவும் வைத்திருந்தது. ஆயினும் பின்னராக இந்தியாவின் அணுகுமுறை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு மட்டுமல்ல தமிழர்களின் நலன்களுக்கும் உகந்ததாக இருக்கவில்லை.
இந்தியா தன்னுடைய இந்த அணுகுமுறையினை மாற்றி தமிழர்களின் தேசியப் பிரச்சனையில் ஈடுபட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்நாளில் கோருகின்றது.

38 ஆண்டுகளைத் தொட்டு நிற்கும் கறுப்புயூலை இனவதையின் இந்நாட்களில் தமிழர் தேசம் சிங்களத்துடன் இணைந்து வாழ முடியாது என்பதனை மீண்டும் மீண்டும் சில வரலாற்று நிகழ்வுகள் நினைவுபடுத்தி வருகின்றன. இவை தமிழர் தேசத்தின் கூட்டு நினைவுகளில் ஆழப் பதிந்து தமிழர் தேசம் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டுமே ஒரே வழியென்பதனை உறுதியாக முரசறைகின்றன.

ஒரு இனத்தின் அழிவும் அவ் இனத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இனவதையினை ஞாபகப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகின்றது.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டும் ஒரேவழி என்ற உறுதியினை இக் கறுப்புயூலை நினைவு நாட்கள் நமக்கு வழங்கட்டும்.

அதே மனஉறுதியோடு இந்நாளில் எமது தனிப்பெரும் பொறுப்பினைச் செயற்படுத்தும் முயற்சிக்காக எம்மை அர்ப்பணிப்போமாக என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here