கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசிய மில்லை.எம்மை நாமே ஆள்வதற்கான உரிமையே வேண்டும்” என்று முழங்கினர்.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் “எமக்கு அபிவிருத்தி முக்கியமல்ல.

நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். எமக்கு உள்ள சுயநிர்ணய உரிமை உரித்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை நான் எனக்கு உள்ள வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி நிதியைப் பெற்று மேற்கொள்வேன். ஆனால் நாம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை கூர்ந்து அவதானிக்கிறது. கடந்த அரசாங்கம் எமக்குச் செய்த கொடுமைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன்  தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சர்வதேச சமூகத்தின் அந்த தார்மீக கடமையை வலியுறுத்துவதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்ற செய்தியை நீங்கள் உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அந்தக் கருமத்தை நிறைவேற்ற முடியும். அதற்கான ஆணையை வழங்கும்படிதான் நான் உங்களிடம் வினயமாகக் கேட்கிறேன். அபிவிருத்தியை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” என்று தொடர்ந்து கூறிவந்தார்.WW கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

தமிழரசுக் கட்சியின் ஆரம்ப நாட்களிலும் சரி அது தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சி என்று பல பரிணாமங்களை அடைந்தபோதும் சரி அது ஒருபோதும் அபிவிருத்தி அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறவில்லை. ஆனால் இன்று தனது கையாலாகாத்தனத்தையும் தன்னுடைய அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் மூடிமறைப்பதற்காக இணக்க அரசியல் அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைகளைப் போர்த்திக்கொண்டு மக்கள் முன் உலாவர முயற்சிக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் முதல் மூன்றாண்டுகள் அதாவது 2012ஆம் ஆண்டுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்சவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதுபோல் நடித்தது. அந்த நாடகம் திருவாளர் சுமந்திரன் மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியதுடன் அம்பலமானது. இலங்கையின் தேசியக் கொடி இலங்கையர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்று கூறி தந்தை செல்வாவே ஏற்க மறுத்த அந்தக் கொடியை 2012ஆம் ஆண்டின் மேதினத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டதன் மூலம் ரணிலின் மூலமாக தென்னிலங்கை அரசியல் சமூகத்துடன் ஒரு இணக்க அரசியலுக்குச் செல்வதற்கு தயாராகிவிட்டதையும் தமிழ்த் தேசிய இனத்தை தனது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எதுவித நிபந்தனையும் விதிக்காமல் உழைத்து 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் மைத்திரியை சனாதிபதியாக்கி ரணிலை பிரதமராக்கி அழகு பார்த்தார் திருவாளர் சம்பந்தன். தமிழர்களை அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடுவதற்கும் மீண்டும் மீண்டும் அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்வதற்குமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுமத்திற்கு அவ்வப்போது அரசாங்கத்தால் சன்மானம் வழங்கப்பட்டு அவர்களின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

வாங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவோ அல்லது சன்மானத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவோ தமிழரசுக் கட்சியும் நிபந்தனை அற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு அதன் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் வழங்கி வருகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் வெற்றியடைவதற்கு உறுதிபூண்டு செயற்பட்டிருந்தது.

எதிர்க்கட்சியில் இருப்பதால் எதிர்ப்பதுபோல் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து இறுதியில் அவற்றை ஆதரித்து வாக்களித்து அரசாங்கத்திற்கும் மக்கள் விரோத வரவு-செலவுத் திட்டத்திற்கும் தமது ஆதரவினை வழங்கி தமிழ் மக்களின் ஆணையைப் புறந்தள்ளியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற தனது பரிபூரண ஆதரவினை வழங்கியிருந்தது.

ஒருபுறம் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோசமிட்டுக்கொண்டு மறுபுறம் அந்த இராணுவம் வடக்கில் நிலைகொள்வதற்கு இடமளிக்கும் வகையில் பாதுகாப்புச் செலவினங்களுக்குக் கூடுதல் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமைக்கு ஆதரவையும் வழங்கி வந்துள்ளது. யுத்தம் இல்லாத ஒரு சூழலில் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பயன்படுத்தி பாதுகாப்பிற்கான நிதியொதுக்கீட்டை குறைப்பதற்குக்கூட அழுத்தம் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் தீர்வு வரப்போகிறது. அதற்கு இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும். அரசாங்கம் கொண்டு வருகின்ற பிரேரணைகள் அனைத்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைய வேண்டும். அப்பொழுதுதான் எமது பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவரும் புதிய அரசியல் யாப்பும் வெற்றி பெறும் என்று குழந்தைத் தனமான காரணத்தைச் சொல்லியிருந்தார்.

அதற்காகவே அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவினையும் வழங்கியிருந்தார்.

ஆனால் இன்று நாளாந்த பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காத நிலைமையிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

2016ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கையில் புதிய அரசாங்கம் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் தீர்வு வரைபு விரைவில் வரவுள்ளது என்றும் தெரிவித்து ஆதரவளிக்கப்பட்டது.231ws1 கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நிதியொதுக்கப்பட்டமையைக் காரணம் காட்டியது. இந்த நேரத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நெருங்கியதால் தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆதரித்தவர்களுக்கும் சிறப்பு நிதியொதுக்கீடாக இரண்டரை கோடியைப் பெற்றுக்கொடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளச் செய்து மிகவும் மோசமான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவினைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் முரண்டுபிடித்துக்கொண்டிருந்த நிலையில் நாட்டில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் அரசாங்கத்தைக் காப்பதற்காக ரணிலுடன் கைகோர்த்து

வரவு-செலவு திட்டத்தை இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கைமாறாக கம்பரெலிய என்னும் கிராம எழுச்சித் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 40 கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன்மொழிவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியை முறையாகச் செலவழிக்கத் தெரியாமல் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழி பிதுங்கி நின்றதைக் காணமுடிந்தது.

தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானியரிடம் இழந்துபோன எமது தேசிய இறைமையை மீண்டும் வென்றெடுக்கப் போகிறோம் என்று புறப்பட்டு அதற்காகவே கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்துவிட்டு இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசு வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு ஓடும் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?mail கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

அண்மையில் இடம்பெற்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் ரணிலின் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் சனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கிவிடாமல் தடுப்பதற்கும் வடக்கு-கிழக்கிற்கான சிறப்பு நிதியொதுக்கீடு என்ற போர்வையில் பனை அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் சுமார் ஐநூறுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் முதற்பகுதியாக திறைசேரியினூடாக 250கோடி ரூபாய் திரு சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டதாக படம் காட்டப்பட்டது.

அபிவிருத்திக்காக வாங்கிய பணத்தை குறைந்தபட்சம் ஒரு சிறப்பு அனுமதியினூடாக சில தொழிற்சாலைகளை நிறுவுவதற்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் அரசாங்கம் போடவேண்டிய வீதிகளைப் புனரமைப்பதற்கும் சில பொதுநோக்கு மண்டபங்களையும் நூலகங்களை நிர்மாணிப்பதற்கும் விளையாட்டுக் கழகங்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதியை அவரவர் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக வழங்கியுள்ளனர்.

மாகாணத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்த மாகாண அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு உழைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே ஐ.தே.கவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் வடக்கு-கிழக்கில் தமது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மேற்கொண்ட அதே அபிவிருத்திப் பணிகளை தேசிய இன விடுதலையை வென்றெடுப்பதாகக் கூறித்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளாலேயே தமிழ் மக்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சர்வதேச மயப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்கவைத்து இன விடுதலையை மலினப்படுத்திவிட்டார் திருவாளர் சம்பந்தன்.

இலங்கை அரசாங்கம் ஐ.நாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை அதனால் அதனை எமது கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவதற்காக நாம் இலங்கையில் முகாமிடப்போகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக சர்வதேச சமூகங்கள் இலங்கையில் மத அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்து மகாசமுத்திரம் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கடற்பாதுகாப்பு பாதிப்படைந்துள்ளது என்ற காரணங்களை முன்வைத்து இலங்கையில் முகாமிட்டுள்ளன. இதன் மூலம் அவை தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கைவிடத் தீர்மானித்துள்ளனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.

திருவாளர் சம்பந்தன் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் ஆலோசனைகளும்கூட காரணமாக இருந்தன. சர்வதேச சமூகம் சொல்லியபடியெல்லாம் ஆடிய சம்பந்தன் இப்பொழுதாவது அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கோரவேண்டும். இது அவரது தார்மீக கடமையாகும்.

இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருப்பதில் பயனில்லை.

எனவே காலம் தாழ்த்தாமல் மக்களின் நாளாந்த பிரச்சினைகளையாவது முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவை மக்களை அணிதிரட்டி மக்களுக்கு அரசியல் விழிப்பு ணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டுவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் நிர்க்கதியாக்கப்படுவார்கள் என்பதும் இந்த நாட்டில் அவர்கள் சம அந்தஸ்துடைய பிரசைகளாக வாழ முடியாத நிலை ஏற்படுவதுடன் தமது அடையாளத்தையும் தொலைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முற்படுவதாகக் கருதியே அதற்கும் சர்வதேச சமூகத்தின் கடமையையும் பொறுப்பையும் நினைவு படுத்துவதற்குமே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றதாக அதன் ஆரம்ப நிகழ்வுகளில் கூறப்பட்டது.

இதற்காகவே வடக்கிலும்-கிழக்கிலும் எழுக தமிழ் என்னும் பெயரில் பாரிய மக்கள் பேரணிகளும் நடாத்தப்பட்டன. அதனால் தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான கொள்கை அடிப்படையிலும் சர்வதேச ரீதியில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அதனடிப்படையில் உறவுகளைத் தீர்மானிக்கிற சக்திகளையும் ஓரணியில் திரட்டி தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பொறுப்பிலிருந்து இனியும் பேரவை விலகியிருக்க முடியாது.