மார்க்சிய போராளி குழு தலைவரைக் காட்டிக்கொடுத்தால் 37 கோடி சன்மானம்- அமெரிக்கா அறிவிப்பு

கொலம்பியாவில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வரும் தேசிய விடுதலை இராணுவம் எனும் போராளிக் குழுவின் தலைவர் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 37 கோடி ரூபாய் ஆகும்.

அவரைக் கைது செய்ய உதவும் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது 38 வயதாகும் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கொக்கைன் போதை பொருள் விநியோகிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

US offers $5m-reward for Colombian ELN rebel leader

இ.எல்.என் என்று அறியப்படும் தேசிய விடுதலை இராணுவம் கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மார்க்சியப் போராளிக் குழுவாகும்.

கொலம்பியாவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து, நிலம் மற்றும் வளங்களை சமமாகப் பிரித்து வழங்கும் நோக்கில் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சியின் உந்துதலால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

நன்றி – பிபிசி